பொள்ளாச்சியில், மளிகை கடையில் தீ விபத்து - பல லட்சம் ரூபாய் பொருட்கள் நாசம்


பொள்ளாச்சியில், மளிகை கடையில் தீ விபத்து - பல லட்சம் ரூபாய் பொருட்கள் நாசம்
x
தினத்தந்தி 25 Aug 2019 10:45 PM GMT (Updated: 25 Aug 2019 11:45 PM GMT)

பொள்ளாச்சியில் மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் விவேகானந்தா வீதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 45). இவர், பொள்ளாச்சி-உடுமலை சாலையில் தேர் நிலையம் அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாலை 5.30 மணியளவில் பூட்டப்பட்டு இருந்த மளிகை கடையில் இருந்து திடீரென கரும்புகை வெளியே வந்தது.

இதனைகண்ட அக்கம் பக்கத்தினர் பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) புருஷோத்தமன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இருப்பினும், இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்து காரணமாக உடுமலை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி தலைமையிலான போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர்.

Next Story