கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி: பெண் உள்பட 4 பேர் கைது
கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம்,
சேலம் கோர்ட்டில் கணினி ஆபரேட்டர், அலுவலக உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கும்பல் பணம் வசூலித்து வருவதாகவும், சிலருக்கு வேலைக்கான பணி ஆணை கொடுத்து உள்ளதாகவும் கோர்ட்டுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கோர்ட்டு தரப்பில் சேலம் மத்திய குற்றப்பிரிவில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இதில் அஸ்தம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 43), நாமக்கல் முள்ளுக்குறிச்சியை சேர்ந்த தங்கமணி (30), ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கணேஷ் (30), ஏத்தாப்பூர் பனைமடல் பகுதியை சேர்ந்த சூரியகலா (36) ஆகியோர் கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. சூரியகலா சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த கும்பலின் தலைவனான செந்தில்குமார் ஏற்கனவே இதுபோன்ற மோசடியில் சிக்கி கைதாகி உள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.50 லட்சம் வரை மோசடி செய்திருக்கலாம் எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செந்தில்குமார், தங்கமணி, கணேஷ், சூரியகலா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இவர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடி செய்திருக்க வாய்ப்புள்ளது. இவர்கள் மீது கொடுக்கப்படும் புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story