11-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு, வடமாநில வாலிபருக்கு 5 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு
11-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வடமாநில வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கோவை,
கேரள மாநிலத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி தனது குடும்பத்தினருடன் சென்னை சென்றார். பின்னர் அவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி ரெயிலில் சொந்த ஊர் திரும்பினார். அவர் ரெயிலில் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் மேல் இருக்கையில் படுத்து இருந்தார். அந்த ரெயில் திருப்பூர்-கோவை இடையே வந்தபோது அதே பெட்டியில் கீழ் இருக்கையில் படுத்து இருந்த மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த கோலாம் மோர்ட்டோஜா (வயது 21) என்பவர் இருக்கையின் ஓரத்தின் வழியாக கையைவிட்டு அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்தார்.
இதற்கு அந்த மாணவி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அந்த மாணவி கேரள ரெயில்வே போலீசில் புகார் செய்தார். திருப்பூருக்கும்- கோவைக்கும் இடையே சம்பவம் நடந்ததால் போத்தனூர் ரெயில்வே போலீசுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து போத்தனூர் போலீசார் கோலாம் மோர்ட்டோஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்படி குற்றம் சாட்டப்பட்ட கோலாம் மோர்ட்டோஜாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும், அபராத தொகை யை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிபதி ராதிகா தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சரோஜினி ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story