விழுப்புரத்தில், மின்மோட்டார் தயாரிக்கும் நிறுவனத்தில் ரூ.15 லட்சம் நகை, பணம் கொள்ளை


விழுப்புரத்தில், மின்மோட்டார் தயாரிக்கும் நிறுவனத்தில் ரூ.15 லட்சம் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 4 Sep 2019 10:15 PM GMT (Updated: 4 Sep 2019 8:07 PM GMT)

விழுப்புரத்தில் மின்மோட்டார் தயாரிக்கும் நிறுவனத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் சாலாமேடு பகுதியில் வசித்து வருபவர் வில்லியம்பேட்ரிக் (வயது 51). இவர் விழுப்புரம் கே.கே.நகர் பகுதியில் மின்மோட்டார் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி தமிழகத்தின் பல மாவட்டங்களில் எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வில்லியம்பேட்ரிக்கும், அவரது உறவினர் வசந்தராஜிம் நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். நேற்று காலை நிறுவனத்தை திறக்க வில்லியம்பேட்ரிக் வந்தார்.

அப்போது அந்நிறுவனத்தின் முன்பக்க இரும்புக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.11 லட்சம் ரொக்கம் மற்றும் 15 பவுன் நகைகள் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து அவர் விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், சதீஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த நிறுவனத்தில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், அந்நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story