குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 9 Sep 2019 10:30 PM GMT (Updated: 9 Sep 2019 7:15 PM GMT)

குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அம்பாத்துறை ஊராட்சியில் அமலிநகர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலிக் குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் போலீசாரிடம் கூறியதாவது:-

காந்திகிராமம் பல்கலைக் கழகத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் எங்கள் கிராமம் அமைந்துள்ளது. எங்கள் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ரெயில் வழித்தடத்தின் மேற்கு பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால் எங்கள் கிராமம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. எனவே காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் எங்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

மேலும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட வேண்டும் என்றால் கிழக்கு பகுதியிலும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனாலேயே கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டோம் என்றனர். இதையடுத்து அவர்களை சமாதானம் செய்த போலீசார், ஊர் மக்கள் சார்பில் சிலர் மட்டும் சென்று கலெக்டரிடம் மனு அளிக்க அனுமதித்தனர்.

பின்னர் குடிநீர் பிரச்சினை குறித்து கலெக்டரிடம் ஊர் முக்கியஸ்தர்கள் மனு அளித்தனர். மனுவை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதேபோல், ஒட்டன்சத்திரம் தாலுகா விருப்பாட்சியை அடுத்த சமத்துவபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதைப்பார்த்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சமத்துவபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மூலமே எங்கள் குடிநீர் தேவை பூர்த்தியாகி வந்தது. இந்த நிலையில் வறட்சி காரணமாக நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்றதால் கிணற்றிலும் தற்போது தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. இதனால் எங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே எங்கள் பகுதியில் கூடுதலாக 2 ஆழ்துளை கிறுகள் அமைக்கவும், அதுவரை லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அதையடுத்து கலெக்டரிடம் இதுகுறித்து மனு அளிக்கும்படி போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து பொதுமக்களில் சிலர் சென்று குடிநீர் பிரச்சினை தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Next Story