கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து மாயமான மேலும் ஒருவர் உடல் மீட்பு - மற்றொருவரை தேடும் பணி தொடருகிறது


கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து மாயமான மேலும் ஒருவர் உடல் மீட்பு - மற்றொருவரை தேடும் பணி தொடருகிறது
x
தினத்தந்தி 14 Sept 2019 4:00 AM IST (Updated: 14 Sept 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் மாயமான மேலும் ஒருவரின் உடல் நேற்று மீட்கப்பட்டது. மற்றொருவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

கபிஸ்தலம்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள மேலராமநல்லூர் கிராமத்தில் கடந்த 11-ந் தேதி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் உள்ள கபிஸ்தலம், குடிகாடு, புத்தூர், நாயக்கர்பேட்டை, பட்டுக்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக ஒரு படகில் சென்றனர்.

அங்கு கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அதே படகு மூலம் 35-க்கும் மேற்பட்டோர் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். சிறிது தூரத்தில் படகு வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆற்றில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த அனைவரும் ஆற்றில் விழுந்தனர். இதில் பலர் நீந்திச்சென்று ஆற்றின் ஒரு பகுதியில் இருந்த மணல் மேட்டில் ஏறி நின்று உயிர் தப்பினர்.

உயிர்தப்பிய 11 பேரும் கவிழ்ந்த படகில் ஏறி நின்று கொண்டு உதவி கேட்டு கூச்சல் எழுப்பினர். இதை கரையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் பலர் தண்ணீரில் நீந்திச்சென்று அனைவரையும் காப்பாற்றினர். பின்னர் அவர்கள் அனைவரையும் உடனடியாக கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிசிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் பட்டுக்குடி தெற்கு தெருவை சேர்ந்த சுயம்பிரகாசம்(வயது 58), புத்தூரை சேர்ந்த ராமலிங்கம் மனைவி ராணி(40), நாயக்கர்பேட்டையை சேர்ந்த பழனிசாமி(58) ஆகிய 3 பேரும் தண்ணீரில் மூழ்கி மாயமானார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மற்றும் பாபநாசம் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி மாயமானவர்களை படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். தீவிர தேடுதலில் ஈடுபட்டு நேற்று முன்தினம் புத்தூரை சேர்ந்த நீலத்தநல்லூர் கொள்ளிடம் பாலம் அருகில் ஆற்றில் ராணியின் உடல் மிதந்து வந்ததை பார்த்து அவரது உடலை மீட்டனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மகாராஜபுரம் என்ற கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் பட்டுக்குடி தெற்கு தெருவை சேர்ந்த சுயம்பிரகாசம் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாயமாக உள்ள நாயக்கர்பேட்டை பழனிசாமியை தீயணைப்பு வீரர்கள் கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Next Story