புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 21 Sep 2019 10:30 PM GMT (Updated: 21 Sep 2019 7:51 PM GMT)

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருச்சி,

புரட்டாசி மாதம் புண்ணியம் மிகுந்ததாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுக்க விரதங்கள், வழிபாடுகள் மற்றும் பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கம். உணவுக் கட்டுப்பாடுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கிற விரதங்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் ஆன்மாவுக்கும் சிறப்பானதாகும்.

அந்த வகையில் புரட்டாசி மாத சனிக்கிழமை விரதவழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். பொதுவாக இந்துக் கள் அனைத்து சனிக்கிழமைகளிலும் விரதம் இருப்பது வழக்கம். அப்படி இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதம் முழுக்க விரதம் இருந்தால் அதே பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம் ஆகும். எனவேதான், புரட்டாசி மாதத்தை விரத மாதம் என்று அழைப்பதுண்டு. அதிலும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருப்பது வழக்கம். இதில் புரட்டாசி சனிக்கிழமைக்கென்று ஒரு விசே‌‌ஷம் உள்ளது. புரட்டாசி சனிக்கிழமையில்தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான பெருமாளை வணங்குவது வழக்கத்தில் வந்தது. நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

ரெங்கநாதர் சுவாமி கோவில்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில் வைணவ தலங்கள் 108-ல் முதன்மையானது. இக்கோவில் தலம், தீர்த்தம் மற்றும் மூர்த்தி ஆகிய மூன்றிலும் சிறப்புடன் விளங்குகிறது. இத்தலத்தில் பெருமாளுக்கு உகந்த தினமான புரட்டாசி சனிக்கிழமைகளில் தரிசனம் செய்வது அனைத்து திவ்யதேச பெருமாளையும் வழிபட்டதற்கு சமமாகும்.

புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால், காலை முதலே சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் அதிகாலை முதலே ரெங்கநாதரை தரிசிக்க திரண்டிருந்தனர். பக்தர்கள் தரிசனம் செய்ய பெரிய சன்னதி, தாயார் சன்னதி மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் சிறப்பு வழி கட்டணம், இலவச வழிதரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

லட்டு பிரசாதம்

அதிகாலை 5.30 மணிக்கு பொங்கல் பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 6.30 மணி முதல் மாலை 5 மணிவரை தொடர்ந்து சேவை நடந்தது. மாலை 5 மணி முதல் 6.45 மணிவரை பூஜைகாலம் என்பதால் சேவை இல்லை. பின்னர் மாலை 6.45 மணி முதல் இரவு 8.45 மணிவரை ரெங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதுபோல தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி ஆகியவற்றிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

முதல் சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ரெங்கநாதரை தரிசனம் செய்து விட்டு வந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் லட்டு, மஞ்சள், கற்கண்டு ஆகியவை தனித்தனி பாக்கெட்டுகளில் வைத்து பிரசாதமாக வழங்கப்பட்டது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று லட்சுமிநரசிம்மரை தரிசனம் செய்தனர்.

சுந்தரராஜ பெருமாள் கோவில்

இதுபோல் ஸ்ரீரங்கம் ெரங்கநாதர் கோவிலின் உபகோவிலும், 108 வைணவ திவ்யதேசங்களில் 4-வதாக விளங்கி வரும் லால்குடி அருகே உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலையில் சுந்தரராஜ வடிவழகர், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் பு‌‌ஷ்பகிரீட அலங்காரத்தில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்து சென்றனர்.

இதுபோல திருச்சி கே.கே.நகர் பெருமாள் கோவில், கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில், திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில், உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்தனர். கோவில்களில் தகுந்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

Next Story