பூமிக்கு அடியில் பதுக்கிய சாராய பேரல்கள், தளவாட பொருட்கள் பறிமுதல் அண்ணன்- தங்கைக்கு வலைவீச்சு


பூமிக்கு அடியில் பதுக்கிய சாராய பேரல்கள், தளவாட பொருட்கள் பறிமுதல் அண்ணன்- தங்கைக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Sep 2019 11:00 PM GMT (Updated: 21 Sep 2019 8:23 PM GMT)

முத்துப்பேட்டை அருகே பூமிக்கு அடியில் பதுக்கிய சாராய பேரல்கள் மற்றும் தளவாட பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக அண்ணன்- தங்கையை தேடி வருகிறார்கள்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியில் சாராயம் காய்ச்சி பெரிய அளவில் விற்பனை செய்து வருவதாக திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் போலீசார் சாதாரண உடையில் முத்துப்பேட்டை அருகே உள்ள

தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதிக்கு சென்றனர். அங்கு சாராய வியாபாரி கடுமணி என்பவர் வீட்டின் கொல்லைபுறத்துக்கு சென்ற போது அங்கு பதுங்கி இருந்தவர்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். ஆனால் அவர்கள் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி ஓடி விட்டனர்.

110 லிட்டர் சாராயம்

இதைத்தொடர்ந்து போலீசார் கடுமணியின் வீட்டின் கொல்லைப்புறத்துக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் அங்கு சாராயம் தயாரிக்க தேவையான பொருட்களை போலீசார் கண்டெடுத்தனர். மேலும் பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சாராய பேரல்கள் மற்றும் சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்படும் தளவாட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைப்போல அருகில் உள்ள கடுமணியின் தங்கை வீட்டிலும் போலீசார் சோதனை செய்தனர். அங்கிருந்தும் சில தளவாட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இரு வீடுகளிலும் இருந்த சுமார் 110 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கடுமணி மற்றும் அவரது தங்கையை தேடி வருகின்றனர்.


Next Story