குமரி மாவட்டத்தில் மழை: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


குமரி மாவட்டத்தில் மழை: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தினத்தந்தி 25 Sept 2019 4:30 AM IST (Updated: 25 Sept 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதே போல் நேற்று நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9.45 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இது சுமார் ஒரு மணி நேரம் கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

நாகர்கோவில்-2.2, பூதப்பாண்டி-5.2, சுருளோடு-44.2, கன்னிமார்-11.4, ஆரல்வாய்மொழி-2.4, பாலமோர்-41.4, ஆனைகிடங்கு-10.2, குளச்சல்-2.8, குருந்தன்கோடு-8.2, அடையாமடை-3, கோழிப்போர்விளை-15, முள்ளங்கினாவிளை-4, திற்பரப்பு-19 என்ற அளவில் மழை பெய்தது.

இதே போல அணைப்பகுதிகளில் பேச்சிப்பாறை-36.4, பெருஞ்சாணி-66.6, சிற்றார் 1-17, சிற்றார் 2-56, மாம்பழத்துறையாறு-10 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

திற்பரப்பு அருவி

மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு 391 கனஅடியும், பெருஞ்சாணி அணைக்கு 788 கனஅடியும், சிற்றார் 1 அணைக்கு 192 கனஅடியும் தண்ணீர் வருகிறது.

அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 122 கன அடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 550 கனஅடியும், சிற்றார் 1 அணையில் இருந்து 200 கனஅடியும் தண்ணீர் பாசனத்துக்காக திறந்துவிடப்படுகிறது.

வெள்ளப்பெருக்கு

அணை பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அருவியில் தண்ணீர் அதிகமாக விழும் பகுதிகளில் கயிறு கட்டி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் கயிறு கட்டிய பகுதியை தவிர மற்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால், திற்பரப்பு அருவிக்கு வந்தவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Next Story