காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 25 Sep 2019 11:00 PM GMT (Updated: 25 Sep 2019 11:46 PM GMT)

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பால் காவிரி பாய்ந்தோடும் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கிறது.

மேட்டூர், 

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்தபடி தண்ணீர் சென்றது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை முதல் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியானது. இதன்காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை கர்நாடக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக அதிகரித்தது. இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது. அணை நிரம்பிய நிலையிலும், அணைக்கு நீர்வரத்தானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது.

நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணை நிரம்பி உள்ளதால், அணைக்கு வரத்து நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி அணையையொட்டி அமைந்துள்ள நீர்மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர்மின்நிலையங்கள் வழியாக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்த மின்நிலையங்களில் நடைபெற்று வந்த மின்உற்பத்தியின் அளவு 150 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 120.21 அடியாக இருந்தது. அதே நேரத்தில் அணைக்கு நேற்று இரவு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடிக்கும் கூடுதலாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து இருந்தது.

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு வருவதால் காவிரி பாய்ந்தோடும் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்தானது தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுப்பணித்துறையினரும், வருவாய்த்துறையினரும் அணையை தீவிரமாக கண்காணித்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து தண்டோரா அறிவிப்பு செய்து வருகின்றன. மேலும் போலீசாரும், வருவாய்த்துறையினரும் ஆற்றின் கரையோரங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story