போலீஸ் போல் நடித்து வியாபாரிகளிடம் நகை பறித்தவர் கைது


போலீஸ் போல் நடித்து வியாபாரிகளிடம் நகை பறித்தவர் கைது
x
தினத்தந்தி 26 Sep 2019 10:30 PM GMT (Updated: 26 Sep 2019 8:26 PM GMT)

உடுமலை அருகே 2 இடங்களில் போலீஸ் போல் நடித்து வியாபாரிகளிடம் பணம் மற்றும் மோதிரங்களை பறித்து சென்றவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

உடுமலை, 

உடுமலையை அடுத்த கோட்டமங்கலம் அருகில் உள்ள வெள்ளியம்பாளையத்தை சேர்ந்தவர் திருமலைசாமி(வயது 60). இவர் உடுமலை அருகே உள்ள மலையாண்டிக்கவுண்டனூரில் டீக்கடை வைத்துள்ளார். அவர் கடந்த 22-ந் தேதி உடுமலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். உடுமலை ஏரிப்பாளையத்தை அடுத்த திருப்பூர் சாலையில் ஒரு பள்ளிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்த ஒருவர் கையை காட்டி திருமலைசாமியை நிறுத்தினார். இதனால் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய திருமலைசாமியிடம் அந்த நபர் தன்னை போலீஸ் என்று கூறினார். அத்துடன் கையில் இப்படி மோதிரம் போட்டுக்கொண்டு செல்லலாமா என்று கேட்டு மோதிரத்தை கழற்றுங்கள். பத்திரமாக மடித்து தருகிறேன் என்று கூறியுள்ளார். அவரை உண்மையான போலீஸ் என்று நம்பிய திருமலைசாமி மோதிரத்தைக்கழற்றி கொடுத்ததும் அதை வாங்கி மடித்து தருவது போல் நடித்து மோதிரத்துடன் தப்பிச்சென்று விட்டார். இது குறித்து திருமலைசாமி உடுமலை போலீசில் புகார் செய்தார்.

இதுபோல் உடுமலை பெரியார் நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி(75). இவர் கரும்பு கிரசருக்கு தேவையான பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் சாமராயபட்டிக்கு சென்று கொண்டிருந்தார். உடுமலை கொழுமம் சாலையில் எஸ்.வி.புரம் பி.ஏ.பி.வாய்க்கால் பாலத்தை கடந்து சென்றபோது அங்கு மோட்டார் சைக்கிளுடன் நின்றுகொண்டிருந்த ஒருவர், பெரியசாமியை தடுத்து நிறுத்தினார்.

அவரிடம் அந்த மர்மநபர் தான் போலீஸ் என்றும் வாகன சோதனை நடத்துவதற்காக நின்றிருப்பதாகவும் கூறினார். பின்னர் பெரியசாமியிடம் அந்தநபர் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு கரும்பு கிரசர் பொருள் வாங்குவதற்காக பணம் கொண்டு செல்வதாக கூறியுள்ளார். அதற்கு அந்த நபர் பணத்தை பாதுகாப்பாக கொண்டு செல்லவேண்டும் அதைகொடுங்கள் பத்திரமாக மடித்து தருகிறேன் என்று கூறி பணத்தையும், அவர் கையில் போட்டிருந்த மோதிரத்தையும் கேட்டுள்ளார். அவரது பேச்சை நம்பிய பெரியசாமி தன்னிடம் இருந்த ரூ.78 ஆயிரம் மற்றும், தான் கையில் போட்டிருந்த அரைப்பவுன் மோதிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை அந்த நபரிடம் கொடுத்தார்.

அந்த மர்ம நபர் அதை கைக்குட்டையில் (கர்ச்சீப்) வைத்து மடிப்பது போல் மடித்து கொடுத்துள்ளார்.அதைபிரித்துப் பார்த்த பெரியசாமி அதிர்ச்சியடைந்தார். அதில் செல்போன் மட்டும் இருந்துள்ளது. பணம் மற்றும் மோதிரம் இல்லை. இதுகுறித்து பெரியசாமி உடுமலை போலீசில் புகார் செய்தார். இரு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபராக இருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

இந்த இருசம்பவங்களிலும் தன்னை போலீஸ் என்று கூறியவர் போலீஸ் உடையில் இல்லாமல் சாதாரண உடையிலேயே இருந்துள்ளார். இது குறித்து திருமலைசாமி மற்றும் பெரியசாமி ஆகியோர் கொடுத்த புகார்கள் குறித்து உடுமலை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் மற்றும் மோதிரங்களை பறித்து சென்ற நபரைத்தேடி வந்தனர். போலீஸ் போல் நடித்து பணம் மற்றும் மோதிரங்களை பறித்து சென்ற நபரை பிடிக்க திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் உத்தரவின் பேரில் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் உடுமலை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள், ஏட்டுகள்செந்தில்குமார், மூர்த்தி, நாகராஜ், நாகேந்திரன், நல்லபெருமாள் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பல்வேறு இடங்களில்அந்த மர்மநபரைத் தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை உடுமலை-பொள்ளாச்சி சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி விசாரித்ததில் 2 வியாபாரிகளிடம் போலீஸ் போல் நடித்து பணம் மற்றும் 2 மோதிரங்களை பறித்து சென்றது அவர்தான் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்டவர் அப்துல்சலீம்(54)என்பதும் பல்லடம் செந்தோட்டம் 2-வது வீதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் மற்றும் 2 மோதிரங்கள் மற்றும் அவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

Next Story