நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: எமரால்டு அணையின் நீர்மட்டம் உயர்வு


நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: எமரால்டு அணையின் நீர்மட்டம் உயர்வு
x
தினத்தந்தி 29 Sep 2019 10:30 PM GMT (Updated: 29 Sep 2019 10:26 PM GMT)

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், எமரால்டு அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் பைக்காரா ஆகிய நீர்மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. இந்த திட்டங்களின் கீழ் குந்தா, அவலாஞ்சி, கெத்தை, பரளி, பில்லூர், காட்டுக்குப்பை உள்ளிட்ட இடங்களில் 12 நீர்மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அங்குள்ள அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு நீர்மின் உற்பத்தி நிலையங்களில் தினமும் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். பருவமழை காலங்களில் அணைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துவிடும். இதன் மூலம் நீர்மின் உற்பத்தி தடையின்றி நடைபெறும். ஆனால் நடப்பாண்டில் கோடை மழை பொய்த்தது. மேலும் தென்மேற்கு பருவமழையும் சரிவர பெய்யவில்லை. இதன் காரணமாக நீர்மட்டம் உயர்ந்து கடல் போல காட்சியளிக்கும் அணைகள் குளம் போல காட்சியளித்தன. மேலும் நீர்மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மாதம் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. குறிப்பாக அவலாஞ்சியில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது. மேலும் சில இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா, பில்லூர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிந்தன. இதனால் உபரி நீர் திறந்து விடப்பட்டது. தற்போது எமரால்டு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 181 அடியாக(முழு கொள்ளளவு 184 அடி) உயர்ந்து உள்ளது.

குறிப்பாக போர்த்தி ஆடா நீர்பிடிப்பு பகுதி வரை தண்ணீர் சூழ்ந்து கடல் போல எமரால்டு அணை காட்சியளிக்கிறது. இந்த காட்சியை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர். இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்பதால், அணைக்கு மேலும் தண்ணீர் வரத்து இருக்கும். அப்போது அணை முழு கொள்ளளவு எட்டும்போது, உபரி நீர் திறந்து விடப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story