தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கிகளை விற்ற மத்திய பிரதேச வியாபாரி கைது சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி நடவடிக்கை


தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கிகளை விற்ற மத்திய பிரதேச வியாபாரி கைது சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 30 Sep 2019 11:15 PM GMT (Updated: 30 Sep 2019 7:07 PM GMT)

தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கிகளை விற்ற மத்திய பிரதேச வியாபாரியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள லாட்ஜில் ஒரு கும்பல் கள்ளத்துப்பாக்கிகளை விற்பனை செய்ய பதுங்கி இருப்பதாக தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி 26-ந் தேதி திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் உதவியுடன் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வுபிரிவு போலீசார் அந்த லாட்ஜில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு அறையில் 3 பேர் கள்ளத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், சென்னை நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த போலீஸ்காரர் பரமேஸ்வரன் (வயது 34), அவரது உறவினர் நாகராஜ் (30), தஞ்சை பட்டுக்கோட்டை திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த சிவா (32) என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 2 கள்ளத்துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த கும்பல் 2 ஆண்டுகளாக கள்ளத்துப்பாக்கிகளை வடமாநிலத்தில் இருந்து வாங்கி வந்து தமிழகத்தில் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்தது தெரியவந்தது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஜென்னீஸ் தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கினர். இதே வழக்கில் நெல்லையை சேர்ந்த எட்டப்பன், கலைசேகர், திவ்யபிரபாகரன், கலைமணி ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப் படையில் வடமாநிலத்தில் இருந்து கள்ளத்துப்பாக்கிகளை தமிழகத்தில் விற்பனை செய்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த புரோக்கர் கிருஷ்ணமுராரி திவாரியை கைது செய்தனர். பின்னர் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்த துப்பாக்கி வியாபாரி பன்சிங்தாக்கூரை சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஜாபர்ஷேட் உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அப்போது பன்சிங்தாக்கூர் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 27-ந்தேதி போபால் ரெயில் நிலையத்தில் நின்ற பன்சிங்தாக்கூரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவரை அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி உத்தரவை பெற்று, திருச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Next Story