நாகர்கோவில் வடசேரியில் சாலை விரிவாக்கம்: 6 மரங்கள் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டன


நாகர்கோவில் வடசேரியில் சாலை விரிவாக்கம்: 6 மரங்கள் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டன
x
தினத்தந்தி 1 Oct 2019 11:00 PM GMT (Updated: 1 Oct 2019 9:12 PM GMT)

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் முன் சாலை விரிவாக்கம் செய்வதற்காக 6 மரங்கள் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டன.

நாகர்கோவில்,

நாகர்கோவில் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல இடங்களில் சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே போல வடசேரி பஸ் நிலையம் முன் உள்ள சாலையையும் விரிவாக்கம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி அங்குள்ள கட்டிட ஆக்கிரமிப்புகளை அதன் உரிமையாளர்களே அகற்றினர்.

இந்த நிலையில் பஸ் நிலையம் அருகே ஆவின் பாலகம் முன் சாலை ஓரம் தென்னை, பலா, வேம்பு மற்றும் மா ஆகிய மரங்கள் நின்றன. இவை சாலை விரிவாக்கத்துக்கு இடையூறாக இருந்தது. எனவே 6 மரங்களை அப்படியே வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நட அதிகாரிகள் திட்டமிட்டனர்.

முதல் முறை

இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின்பேரில் மரங்களை பிடுங்கி வேறு இடத்தில் நடும் பணி நேற்று நடந்தது. முதலில் மரங்களின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. பின்னர் பொக்லைன் எந்திரம் மூலமாக மரத்தை சுற்றிலும் குழி தோண்டி வேரோடு பிடுங்கினார்கள். அதன்பிறகு ராட்சத எந்திரம் மூலம் மரத்தை அப்படியே தூக்கி லாரியில் ஏற்றி புளியடி சுடுகாடு பகுதியில் மீண்டும் நட்டனர்.

இதுபற்றி நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் நன்கு வளர்ந்த 6 மரங்களை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடுவது இதுவே முதல் முறையாகும். புதிதாக நடப்பட்ட மரங்கள் ஒரு மாதம் வரை தீவிரமாக கண்காணிக்கப்படும். தினமும் காலையும், மாலையும் நன்கு தண்ணீர் ஊற்றப்படும். இதன் மூலம் மரங்கள் மீண்டும் துளிர்விடும் என்று நம்புகிறோம். இந்த திட்டம் சாத்தியமாகி விட்டால் இனி மரங்களை வெட்டி அகற்றாமல் இதேபோல வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும்“ என்றனர்.


Next Story