பள்ளிகள், வணிக நிறுவனங்களில் டெங்கு கொசுப்புழுக்கள் இருந்தால் ரூ.50 ஆயிரம் அபராதம்


பள்ளிகள், வணிக நிறுவனங்களில் டெங்கு கொசுப்புழுக்கள் இருந்தால் ரூ.50 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 3 Oct 2019 4:15 AM IST (Updated: 3 Oct 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிகள், வணிக நிறுவனங்களில் டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் தூய்மையே சேவை மற்றும் பிளாஸ்டிக் மாசில்லா தஞ்சை ஆகியவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு வருவாய் கோட்டாட்சியர் சுரே‌‌ஷ் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் முன்னிலை வகித்தார்.

இதில் இந்தியன் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், மாநகராட்சியின் குடியிருப்போர் நலசங்க நிர்வாகிகள், தூய்மை பாரத இயக்க பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தஞ்சையை தூய்மையாக வைத்து கொள்வதுடன், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம் என உறுதிமொழி ஏற்று கொண்டனர். பின்னர் அனைவரும் தஞ்சை காந்திஜிசாலையில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அபராதம்

இது குறித்து தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் கூறும்போது, பொதுமக்கள், குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும். வீடுகளின் உட்புறம் மற்றும் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் டெங்கு ஒழிப்பு களப்பணியாளர்கள் வந்து ஆய்வு செய்கின்றனர். அப்போது வீடுகளில் டெங்கு கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டால் உரிமையாளர்களுக்கு ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகளில் டெங்கு கொசுப்புழு இருப்பது தெரியவந்தால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். அபராதம் கட்ட தவறினால் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும். பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு ஒழிப்பு பணிகளுக்கு பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.


Next Story