ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்


ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்
x
தினத்தந்தி 10 Oct 2019 10:30 PM GMT (Updated: 10 Oct 2019 9:48 PM GMT)

கோட்டை பெருமாள் கோவில் திருவிழாவையொட்டி தெப்ப உற்சவம் நடந்தது.

ஈரோடு,

ஈரோடு கோட்டையில் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவில் உள்ளது. இந்த கோவிலின் புரட்டாசி மாத தேர்த்திருவிழா கடந்த 1-ந் தேதி இரவு கிராமசாந்தி பூஜையுடன் தொடங்கியது. 2-ந் தேதி காலையில் கோவிலில் கொடியேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து தினமும் காலையில் யாகசாலை பூஜை, திருமஞ்சனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

மாலை வேளையில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பெருமாளின் திருவீதிஉலா நடந்தது. கடந்த 7-ந் தேதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

தெப்ப உற்சவம்

கடந்த 8-ந் தேதி காலையில் தேரோட்டம் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவில் குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி திருவீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று இரவு தெப்ப உற்சவம் விழா நடந்தது. விழாவையொட்டி சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதர் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து திருவீதி உலா தொடங்கியது. கோவிலில் இருந்து தொடங்கிய வீதிஉலா ஈஸ்வரன்கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, பிரப்ரோடு வழியாக சென்று தெப்பக்குளத்தை வந்தடைந்தது. அப்போது மேளதாளம் முழங்கவும், வான வேடிக்கையுடன் பெருமாளுக்கு பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் பெருமாளின் தெப்ப உற்சவம் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. தெப்பக்குளத்தில் இருந்து அருள்பாலித்த பெருமாளை, “கோவிந்தா... கோவிந்தா...” என்று பக்தி கோஷம் முழங்க பக்தர்கள் வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்படுகிறது.

Next Story