வெவ்வேறு விபத்துகளில் தொழிலாளி உள்பட 3 பேர் சாவு


வெவ்வேறு விபத்துகளில் தொழிலாளி உள்பட 3 பேர் சாவு
x
தினத்தந்தி 13 Oct 2019 10:15 PM GMT (Updated: 13 Oct 2019 9:09 PM GMT)

வெவ்வேறு விபத்துகளில் தொழிலாளி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கிருஷ்ணராயபுரம்,

கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி அருகே உள்ள காரைக்குடியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 40). இவர் உப்பிடமங்கலம் அருகே உள்ள தமிழ்நாடு செங்கல் சூலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று சாலப்பட்டி ஒத்தக்கடை பஸ் நிறுத்தத்தில் இருந்து செங்கல் சூலைக்கு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ஒரு வேன் நாகராஜன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் நாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியவர் சாவு

நாமக்கல் மாவட்டம், பீமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி (70). இவரது தம்பி ராசு (60). இவர்கள் 2 பேரும் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே எட்டியாக்கவுண்டனூர் கிராமத்தில் ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் இருவரும் தோட்டத்தில் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் நாமக்கல்லை நோக்கி புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ராசு ஓட்டினார். அரவக்குறிச்சி தேசியநெடுஞ்சாலையில் சென்றபோது சாலையில் இருந்த தடுப்புகட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராமசாமி, ராசு ஆகிய 2 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக இறந்தார். ராசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அய்யன்காசன்குளத்தை சேர்ந்தவர் ராதாகண்ணன் (32). இவர் கடந்த 11-ந்தேதி தனது காரில் நாமக்கல்லுக்கு சென்றார். அங்கு வேலையை முடித்து விட்டு அதேகாரில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை புங்கம்பாடி பிரிவு அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த நபர் மீது கார் மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். இதைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் விபத்தில் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story