திருவெண்ணெய்நல்லூர் அருகே, செல்போன் கடை ஊழியர் அடித்துக்கொலை - 3 பேர் கைது
திருவெண்ணெய்நல்லூர் அருகே செல்போன் கடை ஊழியரை அடித்துக் கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அமாவாசைபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சிவராஜ் (வயது 30). இவருக்கும் பெண்ணை வலம் கிராமத்தை சேர்ந்த ஜோதி(24) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜனனி(4), கார்த்திகா(1½) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சிவராஜ் சென்னையில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் செல்போன் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். ஜோதி தனது குழந்தைகளுடன் அமாவாசைபாளையத்தில் வசித்து வந்ததார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவராஜ் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஜோதி கணவரிடம் கோபித்துக் கொண்டு பெண்ணைவலத்தில் உள்ள தாய்மாமனான பெருமாள் மகன் ஏழுமலை(40) என்பவரது வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.
சம்பவத்தன்று சிவராஜ் தனது மனைவி, குழந்தைகளை அழைத்து வருவதற்காக பெண்ணைவலத்துக்கு சென்றார். அப்போது மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதைபார்த்த ஏழுமலை, அவரது தம்பி வீரமுத்து(31) ஆகியோர் சிவராஜிடம் ஏன் உனது மனைவியிடம் தகராறு செய்கிறாய்? என்று அவரை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிவராஜ் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பொக்லைன் எந்திரத்தை ஏழுமலைக்கு சொந்தமானது என நினைத்து, அதன் மீது கற்களை வீசி சேதப்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை, வீரமுத்து, பெருமாள், ஏழுமலை மனைவி காவேரி மற்றும் பொக்லைன் எந்திர உரிமையாளரான அதேஊரை சேர்ந்த கலியபெருமாள் மகன் அப்பாஸ்(28) ஆகிய 5 பேரும் சேர்ந்து சிவராஜை இரும்பு கம்பியாலும், கையாலும் அடித்ததாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மாலை சிவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் பெருமாள் உள்பட 5 பேர் மீது திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து, அப்பாஸ், ஏழுமலை, வீரமுத்து ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பெருமாள், காவேரி ஆகியோரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story