மேட்டூர் அணை நீர்மட்டம் 114.40 அடியாக குறைந்தது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.40 அடியாக குறைந்து உள்ளது.
மேட்டூர்,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாத நிலையில் கர்நாடக மற்றும் கேரளாவில் பருவமழை தீவிரமடைந்தது. இதன் காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணை உள்பட அனைத்து அணைகளும் நிரம்பியது. அணை நிரம்பிய நிலையிலும் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்ததால் இந்த அணைகளில் இருந்து தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதையொட்டி மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கொண்டே வந்தது. இந்த நிலையிலும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் வந்ததால் மேட்டூர் அணை இந்த ஆண்டு 2 முறை நிரம்பியது.
அணை நிரம்பிய நிலையிலும் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணை உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டது. கடந்த சில வாரங்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. கடந்த மாதம் 28-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 19 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரம் அடையும் நேரங்களில் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். மழை குறையும் நேரங்களில் நீர்வரத்து குறைந்தும் மாறி மாறி வந்து கொண்டு இருந்தது. இதன் அடிப்படையில் இந்த மாதத்தில் அதிகபட்சமாக வினாடிக்கு 24 ஆயிரத்து 169 கன அடி தண்ணீர் கடந்த 9-ந் தேதி வந்தது. அதன்பிறகு மழையின் அளவு குறைந்ததால் நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 12 ஆயிரத்து 943 கன அடி வீதம் வந்து கொண்டு இருந்த நீர்வரத்து, நேற்று வினாடிக்கு 8 ஆயிரத்து 290 கன அடியாக குறைந்து உள்ளது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு வரும் நீர்வரத்து குறைவாக இருக்கிறது. இதன் காரணமாக அணையின் நீர் மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது.
நேற்று முன்தினம் 115.10 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 114.40 அடியாக குறைந்து உள்ளது. நேற்று நிலவரப்படி அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 18 ஆயிரத்து 700 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறையுமானால் அணை நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்புள்ளது.
Related Tags :
Next Story