கரூர் அருகே 1,100 ஆண்டுகள் பழமையான கிரந்த மந்திரக்கல்வெட்டு கண்டெடுப்பு


கரூர் அருகே 1,100 ஆண்டுகள் பழமையான கிரந்த மந்திரக்கல்வெட்டு கண்டெடுப்பு
x
தினத்தந்தி 15 Oct 2019 11:00 PM GMT (Updated: 15 Oct 2019 7:29 PM GMT)

கரூர் அருகே 1,100 ஆண்டுகள் பழமையான கிரந்த மந்திரக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்,

இந்திய வரலாற்றை அறிந்துகொள்ள கல்வெட்டு மிகச்சிறந்த முதன்மை சான்றாக விளங்குகிறது. கல்வெட்டு என்பது பொதுவாக கல்லின்மேல் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்களையும் அவை தரும் செய்திகளையும் தொகுத்து படிக்கும் ஓர் ஆவணம் ஆகும். கல்வெட்டு சான்றுகள் மூலம் பண்டைய வரலாறு, மொழியியல், சமூகவியல், அரசியல், பொருளாதாரம் போன்றவற்றை நாம் அறிய முடிகிறது. கி.மு. 6-ம் நூற்றாண்டுக்கு முன்பு அக்கால மக்களின் கருத்தினை தாங்கி நின்ற எழுத்து வரி வடிவங்களாக நமக்கு குறியீடுகள் தான் கிடைத்துள்ளன.

குறியீடுகளுக்கு அடுத்துக் கிடைக்கும் வரிவடிவம் தமிழ் பிராமி வரிவடிவம் ஆகும். தமிழ்பிராமி எழுத்து வடிவம் தமிழகத்தில் கி.மு 6-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 4-ம் நூற்றாண்டு வரை வழக்கத்தில் இருந்தது. கி.பி. 4-ம் நூற்றாண்டு முதல் இவ்வரிவடிவம் தனது அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளத்தொடங்கியது. கி.பி. 5-ம் நூற்றாண்டில் இந்த எழுத்து வரிவடிவம் வட்டவடிவ தன்மையை பெற்றது. அதனால் இந்த எழுத்து வட்டெழுத்து எனப் பெயரிடப் பெற்று அழைக்கப்பட்டது. கி.பி. 11-ம் நூற்றாண்டு வரை இந்த வட்டெழுத்துக்கள் தமிழகத்தில் வழக்கத்தில் இருந்தன.

கி.பி. 10-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட சோழப் பேரரசு வட்டெழுத்துக்கு மாற்றாக தமிழ் எழுத்துக்களைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. சோழப்பேரரசு தமிழகம் முழுவதுமாக மாமன்னன் ராஜராஜசோழன் தலைமையில் விரிவடைந்தது. அதற்குப்பின் தமிழ் எழுத்தைத் தமிழகம் முழுவதுமான ஒரே சீரான வரிவடிவமாக ஏற்படுத்தினர். ஒரு சில மாற்றங்களுடன் இந்தத் தமிழ் எழுத்துக்கள் இன்றுவரை தமிழகத்தில் தொடர்கின்றன.

"தமிழகத்தில் கிரந்த எழுத்து" "கிரந்தம்" என்ற சொல் வடமொழியில் நூல் என்று பொருள்படும். எனவே நூலை எழுதுவதற்கு அடிப்படையாக உள்ள எழுத்தையும் கிரந்தம் என்றே குறிப்பிடுகின்றனர். தமிழ் கல்வெட்டுகளில் வடமொழிச் சொல்லைப் பயன்படுத்தும் போது அந்த வடமொழிச் சொற்களுக்குரிய வரிவடிவங்கள் தமிழில் இல்லாததால் இவற்றை எழுத கிரந்த எழுத்தை தமிழ்நாட்டில் பயன்படுத்தி இருக்கின்றனர்.

தமிழகத்தில் இந்த எழுத்துக்கள் பல்லவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எழுத்துக்கள் தமிழகத்தில் கி.பி. 4-ம் நூற்றாண்டு முதல் நாயக்கர் காலம் ஆன கி.பி. 17-ம் நூற்றாண்டு வரை வழக்கத்தில் இருந்தன. இந்த நிலையில் திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த பொறியாளர் சு.ரவிக்குமார், க.பொன்னுசாமி, ரா.குமரவேல், சு.சதாசிவம், ரா.செந்தில்குமார் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வின் போது கரூருக்கு 12 கிலோமீட்டர் மேற்கே அரவக்குறிச்சி தாலுகாவில் க.பரமத்தி அருகிலுள்ள முன்னூரில், 1,100 ஆண்டுகள் பழமையான கிரந்த மந்திரக்கல்வெட்டு ஒன்றைக் கண்டெடுத்து உள்ளனர்.

இது பற்றி ஆய்வு மைய இயக்குனர் பொறியாளர் சு.ரவிக்குமார் கூறியதாவது:-

தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் கரூரும் ஒன்று. கரூர் பண்டைய நாளில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக விளங்கியது. வடக்கில் கங்கைச் சமவெளியில் இருந்து வந்த தட்சிணபதம் (இன்றைய பெருவழி- 7) கன்னியாகுமரி வரை சென்றது. இப்பெருவழியைப் பற்றி கவுடில்யர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மேற்கு கடற்கரையிலிருந்து பாலக்காட்டு கணவாய் வழியாக வந்த கொங்கப் பெருவழி கரூர், உறையூர் வழியாகப் பூம்புகார் வரை சென்றது. இவ்விரு பெருவழிகளும் கரூரில் சந்தித்தன.

எனவே முதலில் வேளிர்களின் தலைநகராக இருந்த கரூர், சங்ககாலத்தில் சேர வேந்தர் படையெடுப்பில் சேர அரசர்களின் தலைநகரமாக நிலைப்பெற்றது. எனவே வட இந்தியாவுடன் ஏறத்தாழ 2,300 ஆண்டுகளாக கரூருக்கு தொடர்பு இருந்துள்ளது.

இங்கு நமக்குக் கிடைத்துள்ள கல்வெட்டு 110 செ.மீ உயரமும், 43 செ.மீ அகலமும் கொண்டதாகும். 6 வரிகளில் கிரந்த எழுத்துக்கள் இதில் உள்ளன. கிரந்த எழுத்துக்களில் ஒப்பற்ற வடிவையும் எழிலையும் தோற்றுவித்தவன் கி.பி. 8-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னன் ராஜசிம்மன் ஆவான். கிரந்த எழுத்துக்களை மயில் போலும் அன்னப்பறவை போலும் பாம்பு போலும் பல்வகைக் கொடி போலும் எழிலார்ந்த சித்திரங்களைப் போலும் எழுதி மகிழ்ந்த தமிழ் மன்னன் இவனே. இந்த வகை எழுத்துக்கள் உள்ள இந்தக் கல்வெட்டின் கீழ்ப்பகுதியில் திரிசூலம், நந்தி, சங்கு மற்றும் குளம் ஆகியவை காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கல்வெட்டை வாசித்த வரலாற்றுப் பேராசிரியர் ஏ.சுப்புராயலு கூறியதாவது:-

பொதுவாகத் தந்திர வழிபாட்டோடு தொடர்புடைய எழுத்துக்கள், உருவங்கள் ரகசியமாகவே போற்றப்படும். இங்கும் அவ்வாறே காணப்படுகின்றன. இதில் ஒரு வரி படிக்கக் கூடிய நிலையில் இல்லை. எழுத்து அமைப்பை வைத்துப் பார்க்கும்போது இது கி.பி 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.

இவ்வாறுஅவர் கூறினார்.

Next Story