செங்கிப்பட்டி அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; பொக்லைன் ஆபரேட்டர்கள் 2 பேர் பலி
செங்கிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பொக்லைன் ஆபரேட்டர்கள் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள். சாப்பாடு வாங்க சென்றபோது இவர்களுக்கு இந்த துயர சம்பவம் நேர்ந்தது.
கள்ளப்பெரம்பூர்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தேனாம்படுகையை சேர்ந்த அழகர் என்பவரின் மகன் பழனி(வயது 24). திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள அண்ணா வளைவு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் ரவி(21). இவர்கள் இருவரும் தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள ஆச்சாம்பட்டியில் உள்ள ஒரு கிரஷர் தொழிற்சாலையில் பொக்லைன் எந்திர ஆபரேட்டர்களாக வேலை செய்து வந்தனர்.
நேற்று முன் தினம் இரவு பழனி, ரவி ஆகிய இருவரும் தாங்கள் வேலை பார்த்து வந்த கிரஷர் தொழிற்சாலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் செங்கிப்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு உணவு வாங்குவதற்காக வந்து கொண்டிருந்தனர். ரவி மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பழனி மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து இருந்தார்.
செங்கிப்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிள் வந்தபோது வீரமாகாளியம்மன் கோவில் சாலையில் இருந்து வந்த ஒரு கார், ரவி மற்றும் பழனி ஆகியோர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சில நொடிகளில் பழனி சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.
அங்கு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ரவியை மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரவியும் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கிப்பட்டி போலிசார் பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story