நெல்லை மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் போராட்டம் 6-வது நாளாக நீடிப்பு


நெல்லை மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் போராட்டம் 6-வது நாளாக நீடிப்பு
x
தினத்தந்தி 31 Oct 2019 4:30 AM IST (Updated: 31 Oct 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் அரசு டாக்டர்களின் போராட்டம் நேற்று 6-வது நாளாக நீடித்தது.

நெல்லை,

அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை நியமிக்க வேண்டும். காலமுறை தகுதிக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அரசு டாக்டர்களுக்கு பட்டமேற்படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 25-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டம் நேற்று 6-வது நாளாக நீடித்தது. இதில் நெல்லை, சங்கரன்கோவில், தென்காசி உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்யும் டாக்டர்களும் பங்கேற்றனர்.

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர். அங்கு சில டாக்டர்கள் கடந்த 3 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராமகிருஷ்ணன் கூறும்போது, “தமிழக அரசு போராட்டம் நடத்தாத சங்கங்களை அழைத்து பேசி இருக்கிறது. அவர்கள் பணிக்கு திரும்புவதாக அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் போராடும் சங்கங்கள் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கின்றன. எங்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எங்களது போராட்டம் தொடரும்“ என்றார்.

Next Story