பந்தலூர் அருகே, அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானை - பயணிகள் அலறல்


பந்தலூர் அருகே, அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானை - பயணிகள் அலறல்
x
தினத்தந்தி 31 Oct 2019 9:45 PM GMT (Updated: 31 Oct 2019 6:02 PM GMT)

பந்தலூர் அருகே அரசு பஸ்சை காட்டுயானை வழிமறித்தது. இதனால் பயணிகள் அலறினர்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி, சேரங்கோடு, படச்சேரி, ஏலமன்னா, தட்டாம்பாறை, கோட்டப்பாடி, மழவன்சேரம்பாடி, மேங்கோரேஞ்ச் உள்பட பல பகுதிகளில் காட்டுயானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் இரவில் பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் பந்தலூரில் இருந்து சேரம்பாடி செல்லும் சாலையோரம் உள்ள வனப்பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டு இருந்தன.

பின்னர் இரவு 7½ மணிக்கு எலியாஸ்கடை பிரிவு பகுதிக்கு காட்டுயானைகள் வந்து சாலையில் நின்றன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது ஒரு காட்டுயானை அரசு பஸ்சை வழிமறித்தது. இதனால் பஸ்சில் அமர்ந்து இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். உடனே டிரைவர் பஸ்சை பின்னால் சிறிது தூரம் இயக்கினார்.இதைத்தொடர்ந்து முனீஸ்வரன் கோவில் வழியாக சேரங்கோடு அரசு தேயிலை தோட்ட பகுதிக்கு காட்டுயானைகள் சென்றன. அதன்பின்னரே பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மேலும் பயணிகளும் நிம்மதி அடைந்தனர். 

Next Story