மயிலாடுதுறை, சீர்காழியில் பலத்த மழை பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


மயிலாடுதுறை, சீர்காழியில் பலத்த மழை பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 1 Nov 2019 4:15 AM IST (Updated: 1 Nov 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை, சீர்காழி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பழைய பஸ் நிலையம், கொள்ளிடம் முக்கூட்டு, கடைவீதி, காமராஜ் வீதி, ஈசானியத்தெரு, வ.உ.சி.தெரு, கீழத்தென்பாதி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். வள்ளுவக்குடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தின் மேற்கூரையில் மழைநீர் கசிவதால் நோயாளிகள் மற்றும் டாக்டர்கள் அவதிப்படுகிறார்கள். தாழ்வான பகுதிகளில் உள்ள சில இடங்களில் விளை நிலங்களில் மழைநீர் வடிய வழியில்லாமல் சம்பா நெற்பயிர்கள் மூழ்கும் நிலையில் உள்ளது.

வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட திருவாவடுதுறை மடத்தெரு, தையல்நாயகி நகர், அண்ணா நகர், ரெயில்வே ரோடு, கீழவீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலை மற்றும் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை

மேலும் வைத்தீஸ்வரன் கோவில் ரெயில் நிலையம் அருகில் தொடர் மழையால் சாலையோரம் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது.

இதைப்போல மயிலாடுதுறை, மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மயிலாடுதுறையில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.


Next Story