2018-19-ம் ஆண்டிற்கு விவசாயிகள் அனைவருக்கும், 100 சதவீதம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்


2018-19-ம் ஆண்டிற்கு விவசாயிகள் அனைவருக்கும், 100 சதவீதம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 1 Nov 2019 4:00 AM IST (Updated: 1 Nov 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

2018-19-ம் ஆண்டிற்கு விவசாயிகள் அனைவருக்கும் 100 சதவீதம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், வேளாண்மை இணை இயக்குனர் கணேசன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பழனீஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சர்மிளா, கோட்டாட்சியர் செல்வகுமாரி மற்றும் அரசு அதிகாரிகள், விவசாயிகள் சார்பில் சேங்கைமாறன், சேகர், சந்திரன், கன்னியப்பன், ஆப்ரஹாம், அய்யாச்சாமி, மோடி பிரபாகரன், வக்கீல் ராஜா, பரத்ராஜா, முத்துராமலிங்கம் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பேசியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் வழங்கப்பட வேண்டிய பயிர் இழப்பீட்டு தொகை இதுவரை வழங்கவில்லை.

மேலும் இந்த ஆண்டு 2018-19-க்கு வழங்கப்பட வேண்டிய காப்பீடு தொகையில் சுமார் 156 கிராமங்களுக்கு மிக குறைவாக பயிர் காப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அனைவருக்கும் 100 சதவீதம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.

அத்துடன் அனைத்து இடங்களிலும் தட்டுப்பாடின்றி உரம் வழங்க வேண்டும். சிவகங்கை அருகே உள்ள ஸ்பைசஸ்பார்க் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் உரக்கடையில் உரம் கூடுதல்விலைக்கு விற்பனை செய்கிறார்கள். அதை தடுக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்களில் குறிப்பிட்ட சில வகை உரங்கள் தான் விற்பனை செய்கிறார்கள். விவசாயிகளுக்கு தேவையான உரங்களை விற்பனை செய்ய வேண்டும். மடப்புரத்தில் நாய்கள் தொல்லை இருப்பதால் அதை கட்டுப்படுத்த வேண்டும். கண்மாய் மற்றும் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும். பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது:-

பயிர் காப்பீடு திட்டத்தை பொறுத்தவரை கடந்த 2017-18-ம்ஆண்டில் 700 பேருக்கு தான் இழப்பீடு தொகை வழங்கவில்லை. மற்றவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.

இந்த ஆண்டிற்கு (2018-19) ரூ.130 கோடி பயிர் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு உள்ளது. இதில் 156 கிராமங்களுக்கு 25 சதவீதம் தான் இழப்பீட்டு தொகையாக நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது. 130 கிராமங்களுக்கு 100 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே 156 கிராமங்களுக்கும் 100சதவீதம் வழங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனத்திடம் கேட்டுள்ளோம். விரைவில் கிடைத்துவிடும். எனவே அனைவருக்கும் 100 சதவீதம் இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உரங்களை பொறுத்தவரை தேவையான அளவு உரங்கள் கையிருப்பில் உள்ளன. கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்களா என்று கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமாக உரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் இளையான் குடியை அடுத்த கலைகுளம் கிராமத்தை சேர்ந்த அருள்தாஸ் (வயது60) என்ற விவசாயி கையில் 2 வகையான நெல் பயிருடன் வந்து புகார் தெரிவித்து கலெக்டரிடம் நெல் பயிரை காட்டி கூறியதாவது:-

தாயமங்கலத்தை அடுத்த காரைக்களம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு மட்டும் உரங்கள் வழங்குகின்றனர். பயிர்களுக்கு உரங்கள் தேவையான இந்த சமயத்தில் உரம் கிடைக்காததால் பயிர் சரிவர வளரவில்லை.

உரம்போட்ட பயிர் செழித்து வளர்ந்துள்ளது. எனவே அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடு இல்லாமல் உரம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதற்கு கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story