திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடந்தது - திரளான பக்தர்கள் பங்கேற்பு


திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடந்தது - திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 Nov 2019 5:22 AM IST (Updated: 3 Nov 2019 5:22 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருப்பூர்,

முருகன் கோவில்களில் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்தவகையில் திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள கல்யாண சுப்பிரமணியர் கோவிலில் கடந்த மாதம் 28-ந்தேதி கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினசரி காலை 10.30 மணிக்கு அபிஷேக பூஜை நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. கோவிலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்ட கல்யாணசுப்பிரமணியர் யுனிவர்சல் ரோட்டில் கஜமுகசூரனையும், குமரன் ரோட்டில் சிங்கமுக சூரனையும், கோர்ட் வீதியில் பானுகோபனையும், சபாபதிபுரத்தில் சூரபத்மனையும் வதம் செய்தார். பின்னர் கோவிலை வந்தடைந்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்குமேல் திருக்கல்யாணம் நடக்கிறது.

திருப்பூர் விஸ்வேஸ்வரசாமி கோவிலில் தனிசன்னதியில் எழுந்தருளி உள்ள சண்முகசுப்பிரமணியருக்கு கந்த சஷ்டி விழாவையொட்டி கடந்த 28-ந்தேதி முதல் தினசரி காலை 10.30 மணிக்கு அபிஷேக பூஜை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது.

வீரபாகு சிறிய சப்பரத்தில் முன்னே செல்ல அவரைத்தொடர்ந்து பெரிய சப்பரத்தில் சண்முகசுப்பிரமணியர் வந்தார். கே.எஸ்.சி. பள்ளி வீதி, அரிசிகடைவீதி, பூமார்க்கெட் வீதி, விஸ்வேஸ்வரசாமி கோவில் அருகில் ஆகிய 4 இடங்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்த பின் கோவிலை வந்தடைந்தார்.

திருமுருகன் பூண்டியில் உள்ள திருமுருகநாதசாமி கோவிலில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் திருமுருகநாதசாமி முக்கிய வீதிகள் வழியாக தேரில் வலம் வந்து சூரர்களை வதம் செய்தார். இதே போல கொங்கணகிரியில் உள்ள கந்தபெருமான் கோவிலில் நேற்று மாலை சிறப்பு அலங்காரத்தில் கந்தபெருமான் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர் இரவு 7 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெற்றது. நல்லூர் விஸ்வேஸ்வரசாமி கோவிலிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

அவினாசியிலுள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று காலை 10 மணியளவில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, சிறப்பு அர்ச்சனை நடந்தது. மாலை 4.30 மணியளவில் சூரசம்ஹார நிகழ்ச்சி தொடங்கியது. சுவாமி நான்கு ரதவீதிகள் விழியாக வலம் வந்து சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதுபோல் பொங்கலூரை அடுத்த அலகுமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துக்குமாரபாலதண்டாயுதபாணி கோவிலில் நேற்று மாலை சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று காலை 10 மணிக்கு முத்துக்குமார பாலதண்டாயுதபாணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

பல்லடம் மங்கலம் ரோட்டில் உள்ள செல்வவிநாயகர் கோவில் மற்றும் மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவில் ஆகிய கோவில்களில் சூரசம்ஹார விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக விநாயகர்,அம்மையப்பருக்கு அபிஷேகம், அலங்கார பூஜை, மரகதாம்பிகை அம்மையிடம் வெற்றிவேல் பெறுதல், கோவில் வளாகத்தில் சூரனை வதம் செய்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவிலில் இன்று காலை 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம், மதியம் 12 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், 12.45 மணிக்கு அன்னதானம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

சேவூரில் உள்ள அறம் வளர்ந்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேவூர் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து இன்று திருக்கல்யாணம் நடக்கிறது.

Next Story