குமரி கொள்ளையர்களிடம் துப்பாக்கி பறிமுதல் விவகாரம்: வாலிபரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை


குமரி கொள்ளையர்களிடம் துப்பாக்கி பறிமுதல் விவகாரம்: வாலிபரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 6 Nov 2019 10:15 PM GMT (Updated: 2019-11-07T01:41:11+05:30)

குமரி கொள்ளையர்களிடம் துப்பாக்கி பறிமுதல் விவகாரத்தில் வாலிபரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் மதுக்கடை பணியாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதுதொடர்பாக வடசேரி, கோட்டார், சுசீந்திரம் மற்றும் அஞ்சுகிராமம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன. எனவே இதுபோன்ற துணிகர சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாகர்கோவில் கலுங்கடியை சேர்ந்த அருண் சஜூ, பள்ளிவிளையை சேர்ந்த பிரபாகரன், நீலன் உள்பட சிலரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, 3 பேரும் கும்பலாக சேர்ந்து அரிவாள் மற்றும் துப்பாக்கி முனையில் டாஸ்மாக் ஊழியர்களிடம் பணம் பறித்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து அரிவாள் மற்றும் ஒரு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

போலீஸ் காவல்

மேலும் இந்த கொள்ளையர்களுக்கு, நாங்குநேரியை சேர்ந்த டைசன் (வயது 28) என்பவரிடம் இருந்து துப்பாக்கி கிடைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. எனவே டைசனிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்தனர். ஆனால் போலீஸ் தேடுவதை அறிந்த அவர் தலைமறைவாக இருந்தார். இதன் காரணமாக டைசன் திருட்டுத்தனமாக துப்பாக்கி விற்பனை செய்கிறாரோ? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு ஒரு வழக்கில் டைசனை நாங்குநேரி போலீசார் கைது செய்து நெல்லை சிறையில் அடைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த வடசேரி போலீசார் துப்பாக்கி விவகாரம் தொடர்பாக அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

விசாரணை

அதன்படி டைசனை ஒரு நாள் மட்டும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் துப்பாக்கியை மும்பையில் கள்ளச்சந்தையில் வாங்கி வந்தது தெரிய வந்தது. மேலும் கொள்ளையர்களுக்கு அந்த துப்பாக்கியை விற்பனை செய்துள்ளார். அதன் மூலம் தான் கொள்ளையர்கள் பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனையடுத்து டைசனை நேற்று மாலை மீண்டும் நெல்லை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story