டெங்கு கொசுப்புழு இருப்பது தெரியவந்ததால், சாயப்பட்டறை நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம்


டெங்கு கொசுப்புழு இருப்பது தெரியவந்ததால், சாயப்பட்டறை நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 12 Nov 2019 10:00 PM GMT (Updated: 12 Nov 2019 9:51 PM GMT)

திருப்பூரில் சாயப்பட்டறை நிறுவனத்தில் டெங்கு கொசுப்புழு இருப்பது தெரியவந்ததால், அந்த நிறுவனத்திற்கு அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் ஒரு வீ்ட்டின் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

நல்லூர்,

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சாக்கடை வாய்க்கால் தூர்வாரப்படாததால் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுகள் அதிக அளவு உற்பத்தியாகி, பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாகிறது.

மாநகராட்சி சார்பில் முறையாக கொசு மருந்து தெளிக்காததால், கொசுத்தொல்லையை தாங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.இரவு நேரங்களில் வீடுகளில் தூங்க முடியாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே முறையாக கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்று மாநகராட்சியை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். குறிப்பாக மண்ணரை பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடு காரணமாக காய்ச்சல் மற்றும் பல்வேறு நோய் தாக்குதலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு்ளளனர். இதனால் சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து திருப்பூர் மாநகர் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தி, டெங்கு கொசுப்புழு உற்பத்தியாவது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சிட்கோ ரோடு காசிப்பாளையம் பகுதியில் உள்ள ஜெய் நிட் பிராசஸ் என்ற சாயப்பட்டறை நிறுவனத்திற்கு மாநகராட்சி நகர் நல அதிகாரி பூபதி தலைமையில் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் டெங்கு கொசு புழு உற்பத்தியாவது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

அதே போன்று மணியகாரம்பாளையம் அருகே வீடுகளில் முன்பு வைக்கப்பட்ட 60 லிட்டர் கொள்ளளவு உள்ள பிளாஸ்டிக் தொட்டிகளில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பிளாஸ்டிக் தொட்டிகளில் டெங்கு கொசு உற்பத்தியாவது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீடுகளின் முன்பு வைக்கப்பட்டு இருந்த 100 பிளாஸ்டிக் தொட்டிகளை பறிமுதல் செய்தனர். சிவசக்திநகரில் உள்ள ஒரு வீ்ட்டின் தொட்டியில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாவது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டின் குடிநீர் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர்.

அதே போல் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முதலிபாளையம் பகுதியில் டெங்கு கொசு ஒழிக்கும் பணி கடந்த 7-தேதி ஊரக வளர்ச்சி துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் நடந்தது. அப்போது சிட்கோ பகுதியில் நோக்கா ப்ளீச் சர்ஸ் சாயப்பட்டறையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள சாயப்பட்டறை தொட்டியில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுப்புழு உற்பத்தியாவது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சாமிநாதனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் அந்த நிறுவனம் 24 மணிநேரத்தில் தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ஆனால் நிறுவன உரிமையாளர் எவ்வித சுகாதார பணிகளையும், மேற்கொள்ளாமலும், அபராத தொகையை செலுத்தாமலும் இருந்து வந்துள்ளார். இதையடுத்து அந்த சாயப்பட்டறை நிறுவனத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து திருப்பூர் தெற்கு தாசில்தார் மகேஸ்வரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் வி.பி.கனகராஜ் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் சென்றனர்.

இதையடுத்து அபராத தொகையை அந்த சாயப்பட்டறை உரிமையாளர் உடனே செலுத்தினர். இதையடுத்து அங்கு இருந்த நிலமட்ட தொட்டிகளில் இருந்த தண்ணீர் லாரிகள் மூலம் வெளியேற்றப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. இந்த ஆய்வில் சுகாதார அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இந்துமதி, ஊராட்சி செயலர் ராஜசேகர், சுகாதாரப்பணியாளர்கள் இருந்தனர்.

Next Story