சமயபுரம் அருகே, தொழிலதிபர் எரித்துக்கொலை: அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது


சமயபுரம் அருகே, தொழிலதிபர் எரித்துக்கொலை: அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 15 Nov 2019 4:45 AM IST (Updated: 15 Nov 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் அருகே தொழிலதிபர் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கூட்டாக தொழில் செய்ய பணம் பெற்று ஏமாற்றியதால் அவரை கொன்றது, வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.

சமயபுரம், 

திருச்சி மாவட்டம் சிறுகனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தச்சன்குறிச்சி வனப் பகுதியில் ஒரு சொகுசு கார் எரிந்த நிலையில் கிடப்பதாக சிறுகனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, காருக்குள் ஒரு ஆண் உடல் கருகிய நிலையில் எலும்புக் கூடாய் இருந்ததை கண்டனர். இதைத்தொடர்ந்து காரின் என்ஜின் மற்றும் சேஸ் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த சொகுசு கார் திருச்சி காட்டூரை சேர்ந்த தொழிலதிபர் ஜாகீர் உசேனுக்கு(வயது 51) சொந்தமானது என்பதும், அவர் கார்களை வாங்கி விற்கும் நிறுவனம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்ட ஜாகீர் உசேனின் மகன் அக்ரம் உசேன்(22), அந்த கார் தனது தந்தையுடையதுதான் என்றும், காரில் எரிந்த நிலையில் இருப்பது தனது தந்தைதான் என்பதையும் உறுதி செய்தார். இதைத்தொடர்ந்து ஜாகீர் உசேனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் ஆகியோர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து அக்ரம் உசேன் கொடுத்த புகாரின்பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாகீர் உசேனை கொலை செய்தவர்களை தேடிவந்தனர்.

கொலையாளிகளை பிடிப்பதற்காக திருச்சி போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின்படி லால்குடி துணை சூப்பிரண்டு ராஜசேகர் மேற்பார்வையில் சிறுகனூர் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சமயபுரம் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தி, கொலை வழக்கு தொடர்பாக பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த சரவணனை(24) பிடித்து விசாரித்தனர். இதில் அவர் உள்பட 4 பேர் சேர்ந்து ஜாகீர்உசேனை கொலை செய்தது தெரியவந்தது. சரவணன் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் கூறியதாவது:-

கார்களை வாங்கி, விற்கும் நிறுவனம் நடத்தி வந்த ஜாகீர் உசேன், கார்கள் வாங்குவதற்காக அடிக்கடி திருச்சியில் இருந்து சென்னை சென்று வருவது வழக்கம். அவ்வாறு ஒருமுறை சென்றபோது கடலூர் மாவட்டம் ராமநத்தத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு ஜாகீர் உசேன் சாப்பிட சென்றார். அப்போது அதே ஓட்டலில் சாப்பிட வந்த சரவணனுக்கும், ஜாகீர்உசேனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஜாகீர் உசேன், சரவணனிடம் கூட்டாக சேர்ந்து தொழில் செய்யலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் சென்னையில் மசாஜ் சென்டர் வைத்து நடத்தினால் தினமும் ஆயிரக்கணக்கில் வருமானம் கிடைக்கும் என்றும், பெங்களூருவில் துணி வியாபாரம் செய்தால் பல லட்சம் சம்பாதிக்கலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதன்படி கூட்டாக தொழில் தொடங்கலாம் என்று கூறி ஜாகீர் உசேன், சரவணனிடம் பல கட்டங்களாக சுமார் ரூ.75 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் சொன்னபடி அவர் தொழில் தொடங்காத காரணத்தால், சந்தேகமடைந்த சரவணன் ஜாகீர் உசேனிடம் கொடுத்த பணத்தை பலமுறை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு அவர் முறையாக பதில் சொல்லாமல் அலைக்கழித்துள்ளார்.கூட்டாக தொழில் செய்யலாம் என்று கூறி பணம் பெற்ற ஜாகீர் உசேன் ஏமாற்றியதால், சரவணன் ஆத்திரமடைந்தார். இதையடுத்து அவர், ஜாகீர் உசேனுக்கு பெண்கள் விஷயத்தில் பலவீனம் உள்ளதை அறிந்து, ஒரு பெண்ணின் குரலில் அவரிடம் செல்போனில் பேசி, அவரை ராமநத்தத்தில் உள்ள தனக்கு சொந்தமான லாட்ஜுக்கு வரவழைத்துள்ளார்.

தன்னிடம் பேசியது பெண்தான் என்று நம்பிய ஜாகீர் உசேன் அந்த லாட்ஜுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த சரவணன், அவருடைய அண்ணன் மணிகண்டன்(26) மற்றும் லாட்ஜில் வேலை பார்த்த சக்திவேல்(19), மோகன்(30) ஆகிய 4 பேரும் சேர்ந்து ஜாகீர் உசேனை பிடித்து, லாட்ஜில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்தனர். மேலும் அவரை அடித்து உதைத்துள்ளனர். இதில் அவருடைய கை, கால் முறிந்து மயக்கமடைந்தார்.

இந்நிலையில் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, அவர் வந்த காரின் டிக்கியில் அவரை அடைத்து வைத்து, அவரை கொலை செய்ய இடம் தேடி காரில் அலைந்துள்ளனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே தச்சன்குறிச்சி வனப்பகுதியில் ஆள்நடமாட்டம் இருக்காது என்பதை அறிந்து கொண்டு, அந்த பகுதிக்கு காரில் வந்துள்ளனர். அங்கு காரை நிறுத்தி, ஜாகீர் உசேனை டிக்கியில் இருந்து தூக்கி வந்து டிரைவர் இருக்கை அருகே உள்ள இருக்கையில் அமர வைத்துள்ளனர்.

மேலும் அவர்கள் கொண்டு வந்த பெட்ரோலை காரில் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதில் உடல் கருகி ஜாகீர் உசேன் பரிதாபமாக இறந்துள்ளார். தங்கள் திட்டம் நிறைவேறியதை தொடர்ந்து, அவர்கள் 4 பேரும் அங்கிருந்து சென்றுள்ளனர், என்று சரவணன் கூறியதாக, போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சரவணன், மணிகண்டன், சக்திவேல், மோகன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை லால்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிபதி உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.

Next Story