ஆரல்வாய்மொழி அருகே, சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல் - வாலிபர் சாவு
ஆரல்வாய்மொழி அருகே சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே பொய்கை நகரைச் சேர்ந்தவர் சுகானந்தராஜ். இவருடைய மகன் தமிழ் (வயது 24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. செண்டை மேளம் வாசிக்கும் தொழில் செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை தமிழ் தனது மோட்டார் சைக்கிளில் நெல்லை மாவட்டம் பணகுடிக்கு சென்றார். பின்னர், மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை அருகே வந்த போது, திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற லாரி மீது மோதியது. இதில் தமிழ் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
உடனே, அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story