சங்ககிரியில் இருந்து வஞ்சிப்பாளையத்துக்கு புதிதாக சரக்கு ரெயில் சேவை


சங்ககிரியில் இருந்து வஞ்சிப்பாளையத்துக்கு புதிதாக சரக்கு ரெயில் சேவை
x
தினத்தந்தி 20 Nov 2019 11:00 PM GMT (Updated: 20 Nov 2019 7:43 PM GMT)

சங்ககிரியில் இருந்து வஞ்சிப்பாளையத்துக்கு புதிதாக சரக்கு ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பூர்,

சேலம் ரெயில்வே கோட்டத்தில் சரக்கு ரெயில் வருவாயை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருந்து திருப்பூரை அடுத்த வஞ்சிப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு சரக்கு ரெயில் சேவை புதிதாக நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சங்ககிரி ரெயில் நிலையத்தில் இருந்து சிமெண்டு மூடைகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ரெயில் வஞ்சிப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை வந்தது. அப்போது வஞ்சிப்பாளையம் ரெயில் நிலையத்தில் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் சரக்கு ரெயிலை கொடியசைத்து வரவேற்றார். இதில் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன், மூத்த ரெயில் இயக்க மேலாளர் ஹரிகுமார், இந்தியா சிமெண்ட்ஸ் துணைத்தலைவர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு முன்பு வஞ்சிப்பாளையத்தில் சரக்கு ரெயிலில் இருந்து சரக்குகளை இறக்கும் வசதியில்லை. தற்போது அந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

ரூ.142 கோடியே 93 லட்சம்

இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் கூறியதாவது:-

சங்ககிரி-வஞ்சிப்பாளையத்துக்கு இடையே மாதத்துக்கு 15 ரெயில்கள் இயக்கப்படும். இ்ந்த சரக்கு ரெயிலில் 21 சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். இதன் மூலம் மாதத்துக்கு ரூ.45 லட்சம் வருவாய் கிடைக்கும். சேலம் கோட்டத்தில் 12 சரக்கு முனையங்களும், 16 தனியார் சரக்கு முனையங்களும் செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக இரும்பு, சிமெண்டு, பெட்ரோலிய சரக்கு சேவை கையாளப்பட்டு வருகிறது. சரக்கு சேவை மூலமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ரூ.142 கோடியே 93 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இது 201 சதவீதம் அதிக வருவாய் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சேலம் ரெயில்வே கோட்ட வணிக பிரிவு அதிகாரிகளை கோட்ட மேலாளர் பாராட்டினார்.

Next Story