ஆம்புலன்சுக்கு வழிவிடாத பஸ் டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் கோர்ட்டு உத்தரவு


ஆம்புலன்சுக்கு வழிவிடாத பஸ் டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 21 Nov 2019 10:30 PM GMT (Updated: 21 Nov 2019 7:02 PM GMT)

வலங்கைமானில், 108 ஆம்புலன்சுக்கு வழி விடாத தனியார் பஸ் டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வலங்கைமான் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து கும்பகோணத்திற்கு நேற்று முன்தினம் ஒரு தனியார் பஸ் சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சை ஆலங்குடி கோவில்பத்து பகுதியை சேர்ந்த சரவணன்(வயது 28) என்பவர் ஓட்டி சென்றார். ஆலங்குடி என்ற இடத்தில் பஸ் வந்தபோது பஸ்சில் இருந்த பயணிக்கும், டிரைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் டிரைவர் சரவணன், வலங்கைமான் ராமர் சன்னதி பஸ் நிறுத்தத்தில் சாலையின் குறுக்காக பஸ்சை நிறுத்திவிட்டு புகார் அளிப்பதற்காக போலீஸ் நிலையத்திற்கு சென்று விட்டார்.

ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லை

இதனால் அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் அந்த நேரத்தில் நீடாமங்கலம் பகுதியில் இருந்து வந்த 108 ஆம்புலன்சும் வழி கிடைக்காததால் போக்குவரத்து நெரிசலில் சுமார் 20 நிமிடம் சிக்கி தவித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

ரூ.10 ஆயிரம் அபராதம்

பொதுமக்களுக்கு இடையூறாகவும், 108 ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் சாலையின் குறுக்காகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் பஸ்சை நிறுத்திய டிரைவர் சரவணன் மீது வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் அவரை கைது செய்து வலங்கைமான் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

கோர்ட்டில், டிரைவர் சரவணனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அபராத தொகையை உடனடியாக கட்டவும் உத்தரவிடப்பட்டது.


Next Story