தூத்துக்குடியில், பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் தண்டனை வழங்கியதால் விபரீதம்


தூத்துக்குடியில், பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் தண்டனை வழங்கியதால் விபரீதம்
x
தினத்தந்தி 23 Nov 2019 11:00 PM GMT (Updated: 23 Nov 2019 9:47 PM GMT)

தூத்துக்குடியில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் தண்டனை வழங்கியதால் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி கருணாகரன், கொத்தனார். இவருடைய மனைவி செல்வி. இவர்களது மகள் மரிய ஐஸ்வர்யா (வயது 16), மகன் தாம் ஆண்ட்ரூஸ். இவர்களில் மரிய ஐஸ்வர்யா அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாள். அதே பள்ளியில் தாம் ஆண்ட்ரூஸ் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த நிலையில் நேற்று காலையில் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். தாம் ஆண்ட்ரூஸ் பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டான். மரிய ஐஸ்வர்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள்.

மதியம் சாப்பிடுவதற்காக பள்ளிக்கூடத்தில் இருந்து தாம் ஆண்ட்ரூஸ் வீட்டிற்கு வந்தான். தனது அக்காளை வீட்டில் தேடிப்பார்த்தான். அப்போது, வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறைக்கு சென்று பார்த்தபோது மரிய ஐஸ்வர்யா அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாம் ஆண்ட்ரூஸ் அலறினான்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். மரிய ஐஸ்வர்யாவை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மரிய ஐஸ்வர்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவள் படித்த பள்ளிக்கூடம் முன்பு திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகா‌‌ஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கும்படி அவர்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து மாணவியின் குடும்பத்தினர் கூறுகையில், ‘‘கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர் ஒருவர் இறந்து விட்டார். இதனால் மரிய ஐஸ்வர்யா 2 நாட்களாக பள்ளிக்கூடம் செல்லவில்லை. பின்னர் பள்ளிக்கூடத்திற்கு சென்ற மரிய ஐஸ்வர்யாவை ஆசிரியர் ஒருவர் மாணவர்கள் முன்னிலையில் 150 தோப்புகரணம் போடச்சொல்லியும், பள்ளியை ஒருமுறை சுற்றி வரும்படியும் தண்டனை கொடுத்துள்ளார். மேலும் ஒழுங்காக பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை என்றால் தேர்வு எழுத முடியாது என்றும் மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மரிய ஐஸ்வர்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். எனவே, இதற்கு காரணமான அந்த ஆசிரியரை கைது செய்ய வேண்டும். இதனை கண்டுகொள்ளாமல் இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்‘‘ என்று தெரிவித்தனர்.


Next Story