அரசு ஆஸ்பத்திரியில் இருதய சிகிச்சை பிரிவில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு


அரசு ஆஸ்பத்திரியில் இருதய சிகிச்சை பிரிவில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு
x
தினத்தந்தி 25 Nov 2019 10:45 PM GMT (Updated: 25 Nov 2019 2:41 PM GMT)

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருதய சிகிச்சை பிரிவில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்கத்தினர் மனு அளித்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அந்த வகையில் மொத்தம் 470 மனுக்களை கலெக்டர் பிரசாந்த் வடநேேர பெற்றுக் கொண்டார்.

மேலும் முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பெண்ணுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும், மகளிர் சுயஉதவிக்குழுவில் இருந்து 23 பெண்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்துக்கான காசோலையையும் கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்.

கூடுதல் டாக்டா்கள்

இதைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்க நிர்வாகிகள் திரளாக வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், “ ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் இருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகிறார்கள். இந்த ஆஸ்பத்திரியில் இருதய நோய் சிகிச்சை பிரிவு மற்றும் கேத் லேப் பிரிவு செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு போதுமான டாக்டர்கள் இல்லை. இதனால் நோயாளிகள் அவதிப்படுகிறார் கள். அதோடு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மீதான நம்பிக்கையை இழக்க செய்கிறது. எனவே ஏழை மக்களின் நலன் கருதி இருதய சிகிச்சை பிரிவில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், “தமிழகத்தில் பட்டியல் சாதி பிரிவில் உள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், வாதிரியார், தேவேந்திர குலத்தான் ஆகிய 7 பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று சான்றிதழ் பெற தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும், அதே சமயத்தில், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பட்டியல் சாதி பிரிவில் இருந்து வெளியேற்றி வேளாண் மரபினர் என்ற புதிய பிரிவில் கொண்டு வந்து அவர்களுக்கு இடஒதுக்கீடு மக்கள் தொகை அடிப்படையில் வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

பலத்த பாதுகாப்பு

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு (விடுதலை) கட்சியினர் அளித்த மனுவில், “ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகள் மோசமாக உள்ளன. மேலும் அங்கு பல்வேறு முறைகேடுகளும் நடக்கின்றன. எனவே இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் எங்களது கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் யாரேனும் தீக்குளிக்க முயற்சிப்பதை தடுக்க கலெக்டர் அலுவலகத்தின் 2 நுழைவு வாயில்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அதோடு ெபாதுமக்கள் கொண்டு வந்த உடைமைகளை போலீசார் சோதனை செய்தபிறகே கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுப்பினர்.

Next Story