திருப்பூரில் நள்ளிரவில் சம்பவம்: போட்டோ பிரேம் கடையில் தீ விபத்து - மாடியில் தங்கியிருந்த 24 பேர் கீழே குதித்து உயிர் தப்பினர்


திருப்பூரில் நள்ளிரவில் சம்பவம்: போட்டோ பிரேம் கடையில் தீ விபத்து - மாடியில் தங்கியிருந்த 24 பேர் கீழே குதித்து உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 27 Nov 2019 4:00 AM IST (Updated: 27 Nov 2019 4:11 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் நள்ளிரவில் போட்டோ பிரேம் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த கட்டிடத்தின் மாடியில் தங்கியிருந்த 24 பேர் கீழே குதித்து உயிர் தப்பினர்.

திருப்பூர்,

திருப்பூர் கோர்ட்டு வீதியை சேர்ந்தவர் பாண்டிதுரை(வயது 48). இவர் திருப்பூர் சாய்பாபா கோவில் அருகே அவதார் போட்டோ பிரேம் கடை வைத்துள்ளார். 3 மாடி கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் முதல் மாடியில் போட்டோ பிரேம் கடை உள்ளது. 2-வது மற்றும் 3-வது மாடியில் 8 அறைகளுடன் விடுதி செயல்படுகிறது. அங்கு 30-க்கும் மேற்பட்டவர்கள் தங்கியுள்ளனர்.

நேற்று இரவு வழக்கம் போல் போட்டோ பிரேம் கடையை பூட்டி விட்டு பாண்டிதுரை வீட்டுக்கு சென்றார். கடை ஊழியரான ஹாஜி(40) முதல் மாடியில் படுத்திருந்தார். 2-வது மற்றும் 3-வது மாடியில் 24 பேர் தூங்கிக்கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 12 மணி அளவில் முதல் மாடியில் உள்ள பிரேம் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை கவனித்த ஹாஜி உடனடியாக கடையின் மின் இணைப்பை துண்டித்தார். கழிவு பிரேம்கள் குவித்து வைத்திருந்த பகுதியில் தீப்பற்றி அதிகப்படியான புகை வெளியேறியது.

ஹாஜி சத்தம் போட, 2-வது மற்றும் 3-வது மாடியில் தூங்கிக்கொண்டிருந்த 24 பேரும் எழுந்தனர். கீழே இறங்கும் படிக்கட்டு பாதையின் கதவு பூட்டு போட்டு பூட்டப்பட்டு இருந்ததால் வழியின்றி தவித்தனர். புகையால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் பக்கவாட்டில் உள்ள இரும்பு தடுப்புகளை உடைத்து அருகில் உள்ள கட்டிடத்தில் ஏறியும், சிலர் மாடியில் உள்ள குழாயை பிடித்து கீழேயும் குதித்தனர். இதில் அனைவரும் உயிர் தப்பினார்கள்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் துணையுடன் தீயை அணைக்க முயன்றார். முடியவில்லை.

உடனடியாக திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேல்மாடியில் தங்கியிருந்தவர்கள் உடனடியாக கீழே குதித்ததால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினார்கள். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

Next Story