கூடலூரில், ஆர்.டி.ஓ.-வை பணி இடமாற்றம் செய்ய ஆதிவாசி மக்கள் எதிர்ப்பு - அலுவலகத்துக்கு திரண்டு வந்ததால் பரபரப்பு
கூடலூரில் ஆர்.டி.ஓ.-வை பணி இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அவரது அலுவலகத்துக்கு ஆதிவாசி மக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்,
கூடலூரில் ஆர்.டி.ஓ.-வாக ராஜ்குமார் பணியாற்றி வருகிறார். இவர் மக்களிடையே நேர்மையான அதிகாரி என பெயர் பெற்று உள்ளார். இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் இருந்த ராணிப்பேட்டை, திருப்பத்தூரை தனியாக பிரித்து புதிய மாவட்டங்களாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதைத்தொடர்ந்து புதிய மாவட்டங்களுக்கு அதிகாரிகளை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கூடலூர் ஆர்.டி.ஓ.-வாக உள்ள ராஜ்குமாரை, வாணியம்பாடி ஆர்.டி.ஓ.-வாக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதற்கு கூடலூர் தாலுகாவை சேர்ந்த ஆதிவாசி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சிகளை சேர்ந்த ஆதிவாசி மக்கள் நேற்று மதியம் 12 மணிக்கு கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த கூடலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி, பெள்ளி ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து ஆதிவாசி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-
ஆர்.டி.ஓ. ராஜ்குமாரை பணி இடமாற்றம் செய்யக்கூடாது. முதுமலை வனப்பகுதியில் வாழும் மக்களுக்கு மாற்றிடம் வழங்கும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளை அவர் தான் நியாயமான முறையில் விசாரித்து வருகிறார். அவரை மாற்றி விட்டு வேறு அலுவலரை நியமித்தால் விசாரணையில் முன்னேற்றம் இருக்காது. எனவே இன்னும் 1 ஆண்டு காலம் கூடலூர் ஆர்.டி.ஓ.-வாக ராஜ்குமார் பணியில் தொடர்ந்தால், மாற்றிடம் வழங்கும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக அரசு அவரை மாற்றக்கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர். இதை கேட்ட போலீசார் தேர்தல் பயிற்சிக்காக ஆர்.டி.ஓ. ராஜ்குமார் வெளியூர் சென்று உள்ளார். அவர் வருகிற 2-ந் தேதி(நாளை மறுநாள்) அலுவலகத்தில் இருப்பார். அப்போது வந்து அவரை சந்திக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து ஆதிவாசி மக்கள், அலுவலகத்தின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஆர்.டி.ஓ. அறை பூட்டி கிடந்தது. பின்னர் அங்குள்ள ஊழியர்களிடம் விசாரித்துவிட்டு, போலீசார் கூறியது உண்மை என்பதை உறுதி செய்து கொண்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறியதாவது:-
எங்கள் பிரச்சினைகளை அறிந்து ஆர்.டி.ஓ. ராஜ்குமார் செயல்பட்டு வந்தார். முதுமலை வனத்தில் வாழ்ந்து வரும் மக்களுக்கு மாற்றிடம் வழங்கும் திட்டம் கடந்த 13 ஆண்டுகள் ஆகியும் முழுமை பெற வில்லை. இத்திட்டத்தை முழுமையாக முடிப்பதற்கான பணிகளை அவர் விரைவாக மேற்கொண்டு வருகிறார்.
மேலும் மாற்றிடம் வழங்கும் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து நியாயமாக விசாரணை நடத்தி வருகிறார். இதில் பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு நீதி கிடைக்க அவர் இன்னும் 1 ஆண்டு கூடலூரிலேயே ஆர்.டி.ஓ.-வாக பணியில் தொடர வேண்டும். அவரை பணி இடமாற்றம் செய்யக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story