கோர்ட்டுகளில் பெறப்படும் வாக்குமூலங்களை ஆடியோ-வீடியோ பதிவு செய்ய வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கோர்ட்டுகளில் பெறப்படும் வாக்குமூலங்களை ஆடியோ-வீடியோ பதிவு செய்ய வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 Nov 2019 10:30 PM GMT (Updated: 29 Nov 2019 9:09 PM GMT)

குற்ற வழக்கு விசாரணையின்போது சாட்சிகள், பிறழ் சாட்சிகளாக மாறுவதை தவிர்க்க கோர்ட்டுகளில் பெறப்படும் வாக்குமூலங்களை ஆடியோ, வீடியோவில் பதிவு செய்யும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை, 

மதுரை ஐகோர்ட்டில் தாக்கலான பல்வேறு குற்ற வழக்குகளின் மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அவர்கள் தெரிவித்த கருத்து வருமாறு:-

பல்வேறு குற்றவழக்குகளில் ஏராளமானவர்கள் பிறழ்சாட்சி கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் குற்றவாளிகள் விடுதலையானது தெரியவந்துள்ளது. இது தொடர்ந்தால் குற்றவியல் நீதி அமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிடும். சாட்சிகளின் வாக்குமூலத்தை ஆடியோ மற்றும் வீடியோ பதிவு செய்தால், சம்பந்தப்பட்டவர்கள் பிறழ்சாட்சியாக மாறும்போது ஏற்கனவே அளித்த வாக்குமூலத்தை சரிபார்க்கலாம்.

இதன்மூலம் குற்றவாளிகள் தப்பிப்பது தடுக்கப்படும். சாட்சிகள் வாக்குமூலத்தை ஆடியோ அல்லது வீடியோ பதிவு செய்யலாம் என குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தச்சட்டம் கடந்த 2009-ம் ஆண்டில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டும், கடந்த 10 ஆண்டுகளாக சாட்சிகள் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

இவ்வாறு தெரிவித்தனர்..

மேலும் இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள், வக்கீல்களிடமும் கருத்து கேட்டனர்.

முடிவில் சாட்சியங்களை ஆடியோ, வீடியோ பதிவு செய்வது குறித்து நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:-

குற்ற வழக்குகளில் சாட்சிகள், பிறழ்சாட்சியாக மாறாமல் இருக்க குற்ற வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட கோர்ட்டுகள், மகளிர் கோர்ட்டு உள்ளிட்ட கீழ்கோர்ட்டுகளில் சாட்சிகளின் வாக்குமூலத்தை ஆடியோ, வீடியோ பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக 10 ஆண்டுகள், அதற்கு மேல் தண்டனை விதிக்கக்கூடிய குற்ற வழக்குகள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் சாட்சிகளின் வாக்குமூலத்தை கட்டாயம் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.

சாட்சிகளின் வாக்குமூலத்தை ஆடியோ, வீடியோவில் பதிவு செய்ய தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு 3 மாதத்துக்குள் செய்து தர வேண்டும். இது தொடர்பாக வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story