பெரம்பலூரில் தொடர் சம்பவங்கள்: கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை-பணம் திருட்டு


பெரம்பலூரில் தொடர் சம்பவங்கள்: கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 30 Nov 2019 11:00 PM GMT (Updated: 30 Nov 2019 5:36 PM GMT)

பெரம்பலூரில் தனியார் கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்மநபர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் ஆர்.எம்.கே.நகர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ரேகா(வயது 42). இவர்களுக்கு ஹரிகரன் என்கிற மகனும், பிரியதர்‌ஷினி என்ற மகளும் உள்ளனர். செந்தில்குமார் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஹரிகரன் ஈரோட்டில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். பிரியதர்‌ஷினி சிதம்பரத்தில் உள்ள வேளாண் கல்லூரியில் படித்து வருகிறார். இதனால் வீட்டில் ரேகா தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 28-ந்தேதி மதியம் ரேகா தனது வீட்டை பூட்டி விட்டு, அருகே ரோஸ் நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் நேற்று முன்தினம் நள்ளிரவு ரேகா தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் வீட்டினுள் சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 13 பவுன் நகைகளும், ரூ.15 ஆயிரத்தையும் மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதற்கிடையே விரல்ரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இது தொடர்பாக ரேகா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர் திருட்டு

கடந்த 28-ந் தேதி தான் பெரம்பலூர் பகுதியில் ஒரே நாளில் 4 வீடுகளில் 25 பவுன் நகைகள், ரூ.45 ஆயிரம், வெள்ளி பொருட்கள் மற்றும் பட்டுபுடவைகள் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடி சென்றனர். மேலும் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்கள், தற்போது பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சாலையில் ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ஜெயலட்சுமி என்கிற பெண்ணிடம், பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றான். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தனியார் கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் கடந்த அக்டோபர் மாதத்திலும் பெரம்பலூரில் தொடர் திருட்டு, சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திருடர்களின் கூடாரமாக பெரம்பலூர் மாறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதில் ஒரு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிப்பதற்குள், அடுத்தடுத்து திருட்டு சம்பவம், சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவது பெரம்பலூர் போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

போலீசார் திணறல்

இதனால் மர்மநபர்களை போலீசார் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்த திருட்டு, சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே மர்ம கும்பலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பெரம்பலூர் நகர் பகுதியை குறிவைத்து திருட்டில் ஈடுபடும் மர்ம கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசாரை அமைக்க வேண்டும். பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு கூடுதல் போலீசாரை நியமித்து, அவர்களை தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story