இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு எடியூரப்பா ராஜினாமா செய்வார் - சித்தராமையா பேச்சு


இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு எடியூரப்பா ராஜினாமா செய்வார் - சித்தராமையா பேச்சு
x
தினத்தந்தி 2 Dec 2019 4:15 AM IST (Updated: 2 Dec 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்வார் என்று சித்தராமையா பேசினார்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்களூரு கே.ஆர்.புரம் தொகுதியில் நேற்று தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பேசியதாவது:-

முதல்-மந்திரி எடியூரப்பா ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு, பதவிக்கு வந்துள்ளார். அவர் எப்போதும் மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்று ஆட்சியை பிடித்தது இல்லை. பின்வாசல் வழியாக முதல்-மந்திரி ஆகியுள்ளார். 2008-ம் ஆண்டு அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்தார்.

அதன் பிறகு தற்போது ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் 17 எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சியை பிடித்துள்ளார். ஆபரேஷன் தாமரையின் பிதாமகன் எடியூரப்பா. தற்போது 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜனதா டிக்கெட் வழங்கியுள்ளது.

நான் இதுவரை 13 தொகுதிகளில் பிரசாரம் செய்துள்ளேன். மக்கள் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களை தோற்கடிக்க தயாராக உள்ளதை பார்க்க முடிந்தது. மக்கள் வழங்கும் சரியான தீர்ப்பின் மூலம், இனி வரும் காலங்களில் எந்த எம்.எல்.ஏ.வும் கட்சி மாறக்கூடாது. அந்த நிலை உருவாக வேண்டும். 15 தொகுதிகளிலும் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். அவர்கள் யாரும் வெற்றி பெறக்கூடாது. பா.ஜனதா அதிகளவில் பணம் செலவு செய்கிறது. அந்த பணம் எங்கிருந்து வந்தது?.

இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்வார். மத்திய அரசின் தவறான செயல்களால் நாட்டில் பொருளாதார நிலை அதாள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இளைஞர்கள் வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். சரக்கு-சேவை வரி திட்டம் மற்றும் பணமதிப்பிழப்பு திட்டங்களால் ஏராளமான சிறுதொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன.

அனைத்துதரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபடும் ஒரே கட்சி காங்கிரஸ் தான். பசி இல்லாத கர்நாடகத்தை உருவாக்க நான் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக தலா 7 கிலோ அரிசி வழங்கினேன். பெங்களூருவில் மலிவு விலை இந்திரா உணவகங் களை திறந்தோம். இலவச அரிசி திட்டத்தை குறைக்க எடியூரப்பா அரசு முயற்சி செய்கிறது. இந்திரா உணவகங்களுக்கு நிதி ஒதுக்குவதை மாநில அரசு குறைக்க திட்டமிட்டுள்ளது. இந்த முடிவை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரஸ் வீதியில் இறங்கி தீவிர போராட்டம் நடத்தும்.

கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும். தற்போது ஏழைகளுக்கு வழங்கப்படும் 7 கிலோ அரிசி 10 கிலோவாக உயர்த்தி வழங்கப்படும். பசியோடு யாரும் உறங்கக்கூடாது. ஏழைகள் வயிறு நிறைய சாப்பிட வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Next Story