ஸ்ரீபெரும்புதூரில், தொடர் மழையால் ஏரிக்கரை உடைந்து - வீணாக வெளியேறும் தண்ணீர்


ஸ்ரீபெரும்புதூரில், தொடர் மழையால் ஏரிக்கரை உடைந்து - வீணாக வெளியேறும் தண்ணீர்
x
தினத்தந்தி 1 Dec 2019 11:05 PM GMT (Updated: 1 Dec 2019 11:05 PM GMT)

ஸ்ரீபெரும்புதூரில் தொடர் மழையால் ஏரிக்கரை உடைந்து வீணாக தண்ணீர் வெளியேறுகிறது.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் சுங்குவார் சத்திரம் அடுத்த ஜம்போடை கிராமத்தில் வட்டார வளர்ச்சி துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து உபரிநீர் இந்த ஏரிக்கு வரத்தொடங்கியது.

ஜம்போடை ஏரியில் இருந்து மதகு வழியாக வெளியறி வந்தது. நேற்று நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ஏரியின் கரை உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சீபுரம் மாவட்ட துணை கலெக்டர் சரவணன் ஜம்போடை ஏரியை நேரில் சென்று பார்வையிட்டு, ஏரிநீர் வெளியேறாமல் இருக்க மணல் மூட்டை அடுக்க உத்தரவிட்டார்.

ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த துணை கலெக்டர் சரவணன் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் தொடர் மழை காரணமாக நிரம்பி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் துறை சார்ந்த அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. மேலும் தற்போது வெளியேற்றும் உபரி நீரானது, காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் உள்ள பெரிய ஏரியான தென்னேரியை சென்றடையும் என தெரிவித்தார்.

ஆய்வின்போது ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வசுமதி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story