தேன்கனிக்கோட்டை அருகே மாம்பழ வியாபாரி மர்ம சாவு போலீசார் விசாரணை


தேன்கனிக்கோட்டை அருகே மாம்பழ வியாபாரி மர்ம சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 3 Dec 2019 11:00 PM GMT (Updated: 3 Dec 2019 9:03 PM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே மாம்பழ வியாபாரி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேன்கனிக்கோட்டை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள சாரங்கப்பள்ளியைச் சேர்ந்தவர் கணே‌‌ஷ் (வயது 45). மாம்பழ வியாபாரி. இவர் தேன்கனிக்கோட்டை அருகே இஸ்லாம்பூர் பகுதியில் உள்ள ஒரு மாம்பழ கூழ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு மாம்பழங்கள் வாங்கி அனுப்பி தொழில் செய்து வந்தார். அந்த நிறுவனத்தை கிரு‌‌ஷ்ணகிரியை சேர்ந்த ஒருவர் நடத்தி வந்தார். கணேசுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் மாம்பழ விற்பனை தொடர்பாக கணேசுக்கும், அவர் வேலை செய்து வந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோருக்கும் கொடுக்கல் - வாங்கல் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கணே‌‌ஷ் நேற்று முன்தினம் இரவு அந்த நிறுவன வளாகத்தில் தூக்கில் மர்மமான முறையில் பிணமாக தொங்கினார்.

உறவினர்கள் புகார்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் அங்கு திரண்டு வந்தனர். பண பிரச்சினையில் அவரை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக அவர்கள் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக தேன் கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் நேற்று தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story