பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி குமரி கடல் பகுதியில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை


பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி குமரி கடல் பகுதியில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 4 Dec 2019 11:00 PM GMT (Updated: 4 Dec 2019 5:46 PM GMT)

பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கன்னியாகுமரி,

பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ‘சவுகாஜ்’ என்ற பாதுகாப்பு ஒத்திகைநேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்த பாதுகாப்பு ஒத்திகை 7-ந் தேதி காலை 7 மணி வரை நடைபெறுகிறது.

கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கண்காணிப்பு

இதையொட்டி கன்னியாகுமரி கடலோர பதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான போலீசார் ஒரு படகில் சின்னமுட்டத்தில் இருந்து கூடங்குளம் வரையும், மற்றொரு படகில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சின்னமுட்டத்தில் இருந்து நீரோடி வரை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடல் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் படகுகள் நடமாட்டம் உள்ளதா? எனவும் கண்காணித்தனர்.

இதேபோல் கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து வாகனத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுடலைமணி, டென்னிசன் ஆகியோர் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

48 கடற்கரை கிராமங்கள்

மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள 48 கடற்கரை கிராமங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

இதேபோல் கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு சொந்தமான 11 சோதனை சாவடிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story