திருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டதில் ஒரு கிலோ நகையை போலீசார் எடுத்துக்கொண்டனர் கொள்ளையன் சுரேஷ் குற்றச்சாட்டு


திருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டதில் ஒரு கிலோ நகையை போலீசார் எடுத்துக்கொண்டனர் கொள்ளையன் சுரேஷ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Dec 2019 11:15 PM GMT (Updated: 4 Dec 2019 6:34 PM GMT)

திருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டதில் ஒரு கிலோ நகையை போலீசார் எடுத்துக்கொண்டனர் என்று கோர்ட்டு வளாகத்தில் கொள்ளையன் சுரேஷ் பரபரப்பாக குற்றம்சாட்டி பேட்டி அளித்தார்.

திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த அக்டோபர் மாதம் 2-ந்தேதி அதிகாலை சுமார் ரூ.13 கோடி மதிப்புள்ள 28½ கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. நகைக்கடையின் பின்பக்க சுவரில் துளை போட்டு, முகமூடி அணிந்தபடி உள்ளே சென்ற கொள்ளையர்கள் துணிச்சலாக இந்த கொள்ளையை நடத்தினர்.

இந்த சம்பவம் திருச்சியில் மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர புலன் விசாரணை நடத்தி வந்தனர்.

திருவாரூர் முருகன்

இதற்கிடையில் திருவாரூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது மணிகண்டன் என்பவர் 4 கிலோ 700 கிராம் நகையுடன் பிடிபட்டார். மேலும் மணிகண்டனுடன் வந்த சுரேஷ் என்ற வாலிபர் தப்பி ஓடினார்.

மணிகண்டனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நகைகள் அனைத்தும் திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டது என்பதும், திருவாரூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் தலைமையிலான கொள்ளை கும்பல் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய சுரேஷ் முருகனின் சகோதரி மகன் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

கோர்ட்டில் சரண்

மணிகண்டனை திருவாரூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொள்ளையில் மூளையாக செயல்பட்ட திருவாரூர் முருகன், சுரேஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் சென்னை, பெங்களூரு, மதுரை உள்ளிட்ட இடங்களில் வலைவீசி ேதடி வந்தனர். இதற்கிடையில் சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கோர்ட்டில் சரண் அடைந்தார். முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தார்.

சுரேசை திருச்சி கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கோர்ட்டு அனுமதி பெற்று காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். சுரேஷ் அளித்த தகவல்களின் அடிப்படையில் லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் சுமார் 25 கிலோ கைப்பற்றப்பட்டது.

பெங்களூரு விரைந்தனர்

முருகனிடம் விசாரணை நடத்தினால் தான் மீதம் உள்ள நகைகள் பற்றிய விவரத்தை அறிய முடியும் என்பதால் திருச்சி போலீசார் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றனர்.

ஆனால் பெங்களூரு நகரில் முருகன் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அவரை பெங்களூரு போலீசார் கோர்ட்டு அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இதனால் முருகனை உடனடியாக திருச்சிக்கு அழைத்து வர முடியவில்லை.

பெங்களூரு கோர்ட்டில் சிறை மாற்றத்திற்கான ஆணைபெற்ற பின்னரே திருச்சி போலீசார் முருகனை கைது செய்ய முடிந்தது. அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு கொண்டு வந்த போலீசார் முருகனை கொள்ளை சம்பவம் நடந்து 55 நாட்களுக்கு பின்னர் கடந்த 26-ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

7 நாள் விசாரணை

மறுநாள் (27-ந்தேதி) போலீசார் முருகனை திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-2 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு திரிவேணி முன் ஆஜர்படுத்தி அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த 14 நாட்களுக்கு அனுமதி தரவேண்டும் என கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால் மாஜிஸ்திரேட்டு, 7 நாட்கள் மட்டுமே முருகனிடம் விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி வழங்கினார். இதனை தொடர்ந்து முருகனை அழைத்து சென்ற போலீசார் ரகசிய இடங்களில் வைத்து விசாரணை நடத்தினர்.

7 நாட்கள் விசாரணை முடிந்து விட்டதால் நேற்று மாலை போலீசார் முருகனை மாஜிஸ்திரேட்டு திரிவேணி முன் ஆஜர்படுத்தினார்கள். அப்போது முருகனிடம் மாஜிஸ்திரேட்டு போலீசார் ஏதாவது துன்புறுத்தினார்களா? என கேட்டார். அதற்கு முருகன் இல்லை என பதில் அளித்தார்.

காவல் நீட்டித்து உத்தரவு

அதன் பின்னர் முருகன,் திருவெறும்பூரில் நான் வாடகைக்கு தங்கி இருந்த வீட்டில் எனது துணிமணிகள் உள்ளன. சிறையில் எனக்கு மாற்று உடை கூட இல்லாததால் அவற்றை எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை வைத்தார்.

அதற்கு இதுபற்றி முறைப்படி மனு தாக்கல் செய்யும்படி கூறிய மாஜிஸ்திரேட்டு திரிவேணி, முருகனை வருகிற 16-ந்தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து முருகன் தனி வேனில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கொள்ளையன் சுரேஷ்

முன்னதாக நேற்று காலை சி்றைக்காவல் முடிந்ததால் கொள்ளையன் சுரேசை திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-2 கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரது சிறைக்காவலையும் வருகிற 16-ந்தேதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு திரிவேணி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து சுரேசை போலீசார் வேனுக்கு அழைத்து சென்றனர். போலீஸ் வேனில் ஏறியதும் சுரேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

போலீசார் மீது குற்றச்சாட்டு

திருச்சி நகைக்கடையில் கொள்ளையடித்ததில் எனது பங்காக கிடைத்த 5 கிலோ 700 கிராம் நகையுடன் நானும், மணிகண்டனும் திருவாரூருக்கு சென்று கொண்டிருந்ேதாம். அப்போது மணிகண்டன் நகையுடன் சிக்கிக் கொண்டான். அவனிடம் பறிமுதல் செய்த நகைகளில் ஒரு கிலோவை போலீசார் எடுத்துக்கொண்டனர். 4 கிலோ 700 கிராம் தான் கணக்கு காட்டி உள்ளனர்.

இதுபற்றி நான் கோர்ட்டில் சொல்ல விடாமல் போலீசார் தடுத்தனர்். கொள்ளையடித்த நகைகளை எல்லாம் கொடுத்து விட்டேன். ஆனாலும் போலீசார் கூடுதலாக நகை தரும்படி கேட்டு எனது குடும்பத்தினரை சித்ரவதை செய்து உள்ளனர். நான் வீடு புகுந்து கொள்ளையடித்ததாக புதிதாக ஒரு வழக்கை போட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவர் மேலும் பல தகவல்களை கூற முயன்றபோது போலீசார் தடுத்து வேனை அங்கிருந்து கிளப்பி சென்று விட்டனர். பின்னர் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். போலீசார் மீது சுரேஷ் திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story