மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை மேலும் உயர்த்தும் ப.சிதம்பரம் பேட்டி


மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை மேலும் உயர்த்தும் ப.சிதம்பரம் பேட்டி
x
தினத்தந்தி 8 Dec 2019 11:15 PM GMT (Updated: 8 Dec 2019 5:23 PM GMT)

மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை மேலும் உயர்த்தும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

திருச்சி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கடந்த சில நாட்களுக்கு முன் ஜாமீனில் விடுதலையானார். ஜாமீன் கிடைத்த பின்னர் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக ப.சிதம்பரம் நேற்று விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பு முடிந்த பின்னர் ப.சிதம்பரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியாவுக்கு யார் அகதி களாக வந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்வதா?, வேண்டாமா? என்பது குறித்து முழு மசோதா வேண்டும். அகதிகளை எந்த நிபந்தனையின் அடிப்படையில் ஏற்று கொள்வது என்பது குறித்த சட்ட மசோதா வேண்டும். ஆனால் அகதிகள் சட்ட நலத்திற்கு பதிலாக தேசிய குடியுரிமை சட்ட மசோதா கொண்டு வருவது மத அடிப்படையிலான பல குழப்பங்களை ஏற்படுத்தும். எனவே தான் தேசிய குடியுரிமை சட்ட மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது.

இந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. கார்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக இந்த அரசு உள்ளது. வரி சுமையை ஏற்றி மக்களுக்கு பாரத்தை கூட்டியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 30 கோடி அன்றாட கூலி தொழிலாளிகளின் வருமானம் பாதியாகி விட்டது.

வருமானம் பாதியானால் அந்த குடும்பம் எப்படி பிழைக்கும்? அதனால் தான் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் மக்களின் வாங்கும் சக்தி ஏறத்தாழ 24 சதவீதம் அளவிற்கு குறைந்து விட்டது. வாங்கும் சக்தி இல்லை என்றால் பொருள் விற்பனை நடக்காது. பொருள் விற்கவில்லை என்றால் யாரும் உற்பத்தி செய்ய மாட்டார்கள். இப்படி ஒன்றையொன்று தொடர்பு படுத்தி பார்த்தால் இந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது.

ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினையை புரிந்து கொள்ளும் திறனும் இல்லை, அதை சரி செய்யவும் வழி தெரியவில்லை. மாறாக கார்பரேட் முதலாளிகளுக்கு உதவுகிறார்கள். இதே நிலை தான் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளது. மத்திய அரசு பல துறைகளை தனியார்மயமாக்கி வருகிறது. ஆனால் ரெயில்வே துறையை தனியார்மயமாக்க ரொம்ப நாள் ஆகும், அதுவரை இவர்கள் பதவியில் இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

மத்திய அரசினை ‘இன்காம்பிடென்ட்’ அரசு என நான் கூறவில்லை. உலக புகழ்பெற்ற பொருளாதார பத்திரிகை திறமை இல்லாத நிர்வாகிகள் என இவர்களுக்கு பட்டம் சூட்டி இருக்கிறது. இந்த செய்தி உலகம் முழுவதும் பரவி இந்த வார்த்தை அடைமொழி போல் ஒட்டிக்கொண்டது. இதனை நாளுக்கு நாள் அவர்கள் நிரூபித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து சூறையாடி பெற்று இருக்கிறார்கள். அதனை என்ன செய்தார்கள்? கார்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை காட்டி இருக்கிறார்கள். இந்த பற்றாக்குறையை நிரப்ப அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அனைத்து ஜி.எஸ்.டி. வரியையும் உயர்த்த போகிறார்கள். அனைத்து வரிகளும் உயரப்போகிறது. 5 சதவீத வரி 8 சதவீதம் ஆகவும், 8 சதவீத வரி 12 சதவீதம் ஆகவும், 12 சதவீத வரி 18 சதவீதமாகவும் உயரப்போகிறது.

வரி உயர்த்தப்பட்ட பொருட்களை யார் வாங்க போகிறார்கள்? ஏழை, நடுத்தர வர்க்கத்தினர், பணக்காரன் என எல்லோரும் தான் வாங்குவார்கள். ஆக எல்லோர் மீதும் வரிச்சுமையை ஏற்றப்போகிறார்கள். அதே நேரத்தில் கார்பரேட் முதலாளிகளுக்கு சலுகை தர போகிறார்கள்.

மத்திய அரசு தமிழில் சொல்லப்படும் போண்டி என்ற நிலையில் உள்ளது. இவர்களால் ஏழை எளிய மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. விவசாய கடன்களை அந்தந்த மாநில அரசுகள் தான் தள்ளுபடி செய்யவேண்டும். தமிழக அரசின் செயல்பாடு என ஒன்றும் சொல்ல முடியாது. சூத்திரதாரியான மத்திய அரசு சொல்வதை கேட்டு ஆடுகிறது.

தற்போது உள்ள மத்திய அரசினை பதவி விலக வேண்டும் என்று கூறவில்லை. 7 மாதங்களுக்கு முன் தான் அபரிமிதமான வெற்றியை பெற்ற இவர்கள் மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள். மக்களுக்கு இவ்வளவு துரோகம் செய்வார்கள் என யாரும் கனவு கூட கண்டு இருக்க மாட்டார்கள்.

2021-ல் என்ன அதிசயம் நடக்கும் என்பதை ரஜினியிடம் தான் கேட்கவேண்டும். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் பல பிழைகள் இருப்பதாக சொல்கிறார்கள். குறிப்பாக தொகுதி வரையறை, ஒதுக்கீட்டில் குழப்பங்கள் இருக்கிறது. தி.மு.க. உச்சநீதிமன்றத்தை அணுக இருக்கிறது என்ற செய்தியையும் பார்த்தேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிலை என்ன என்பதை மாநில தலைவர் ஆலோசனை செய்து அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜோசப் லூயிஸ், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஜவகர், கோவிந்தராஜ், கலை, முன்னாள் மேயர் சுஜாதா, பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ் உள்பட ஏராளமான தொண்டர்கள் ப.சிதம்பரத்துக்கு வரவேற்பு அளித்தனர்.

ெதாண்டர்கள் அவருக்கு மாலை, சால்வை அணிவிக்க முண்டியடித்துக்கொண்டு வந்ததால் காரில் ஏற சென்றபோது ப.சிதம்பரம் நிலைத்தடுமாறி சரிந்தார். அப்போது தொண்டர்கள் அவரை கீழே விழ விடாமல் தாங்கி பிடித்துக்கொண்டனர். மேலும் ப.சிதம்பரத்தை வரவேற்க தொண்டர் ஒருவர் வெங்காய மாலையுடன் வந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story