உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அரியலூர் மாவட்டத்தில் முதல் நாளில் 129 பேர் வேட்பு மனு தாக்கல்


உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அரியலூர் மாவட்டத்தில் முதல் நாளில் 129 பேர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 9 Dec 2019 10:30 PM GMT (Updated: 9 Dec 2019 7:54 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் முதல் நாளில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 120 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 9 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட 12 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 113 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 201 கிராம ஊராட்சி தலைவர்கள், 1,662 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 1,988 பதவியிடங்களுக்கு நேர்முக தேர்தல் 2 கட்டமாக 1,017 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளான அரியலூர், செந்துறை, திருமானூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதற்கட்டமாக வருகிற 27-ந் தேதியும், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2-ம் கட்டமாக வருகிற 30-ந்தேதியும் வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கான வேட்பு மனுதாக்கள் நேற்று தொடங்கியது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் ஆகிய பதவியிடங்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்பு மனுக்களை வாங்கி, வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, அந்தந்த கிராம ஊராட்சி அலுவலகத்திலும் வேட்பு மனுக்களை வாங்கி, வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.

129 பேர்

இதனால் அங்கு நேற்று பலர் வேட்பு மனுக்களை வாங்கி சென்றதை காணமுடிந்தது. அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 16 பேரும், திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் 21 பேரும், செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் 10 பேரும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் 39 பேரும், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13 பேரும், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் 21 பேரும் என மொத்தம் 120 பேர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்காக, அந்தந்த கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள செயலாளரிடம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் பதவியிடத்துக்கும் யாருமே வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. இதே போல் அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 4 பேரும், திருமானூர், செந்துறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தலா ஒருவரும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் 3 பேரும் என மொத்தம் 9 பேர், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். ஆனால் ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கிராம ஊராட்சி தலைவருக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்த போது வேட்பாளருடன் முன்மொழிபவர் ஒருவரும், வேட்பாளர் விரும்பும் 3 பேர் உள்பட 5 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும் இதுவரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story