போதை பழக்கத்துக்கு அடிமையாகும் குழந்தைகளை மீட்டெடுக்க நடவடிக்கை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் பேட்டி


போதை பழக்கத்துக்கு அடிமையாகும் குழந்தைகளை மீட்டெடுக்க நடவடிக்கை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் பேட்டி
x
தினத்தந்தி 10 Dec 2019 10:45 PM GMT (Updated: 10 Dec 2019 10:03 PM GMT)

போதை பழக்கத்துக்கு அடிமையாகும் குழந்தைகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்தார்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத்தில் குழந்தைகள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள், அதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் விக்ராந்த் ராஜா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பன்வால், புதுச்சேரி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் தேவி பிரியா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆணையம் பாராட்டு

கூட்டத்தின் முடிவில், தேசிய ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து வருவோரை உடனுக்குடன் கைது செய்து நடவடிக்கை எடுத்து வரும் மாவட்ட கலெக்டர், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.

இதுபோன்ற நடவடிக்கைகளை எந்த வகையில் ஊக்கப்படுத்தலாம் என்பது குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது.

மீட்டெடுக்க நடவடிக்கை

காரைக்காலில் புகையிலைப் பொருட்கள் விற்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை முறையாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த பழக்கத்துக்கு அடிமையாகும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு அளித்து மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த, போதைப்பொருள் ஒழிப்பு குறித்தான விழிப்புணர்வு கையெழுத்து பலகையையும், செல்பி கார்னரையும் தேசிய ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த், கலெக்டர் விக்ராந்த் ராஜா மற்றும் பலர் பார்வையிட்டு செல்பி எடுத்துக்கொண்டனர்.


Next Story