நாகர்கோவிலில் நகை கண்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் தொழிலாளர்கள் பேரவை வலியுறுத்தல்


நாகர்கோவிலில் நகை கண்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் தொழிலாளர்கள் பேரவை வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Dec 2019 10:45 PM GMT (Updated: 11 Dec 2019 8:09 PM GMT)

நாகர்கோவிலில் நடைபெற உள்ள நகை கண்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று நகை தொழிலாளர்கள் பாதுகாப்பு பேரவை வலியுறுத்தி உள்ளது.

நாகர்கோவில்,

இது தொடர்பாக குமரி மாவட்ட நகை தொழிலாளர்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் ெசலஸ்டின் மற்றும் நிர்வாகிகள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் நகை தொழில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. பாரம்பரிய நகை தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலையின்றி பிற தொழிலுக்கு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. குமரி மாவட்டத்தில் தற்போது 30 சதவீத நகை கடைகள் மொத்த பட்டறையில் 30 சதவீதம் கூட செயல்படவில்லை.

எனவே இதை கருத்தில் கொண்டு குமரி மாவட்டத்தில் நகை கண்காட்சி நடத்த கூடாது என்று 2005-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் கூறப்பட்டது.

அனுமதி அளிக்க கூடாது

இந்த நிலையில் நாகர்கோவிலில் நகை கண்காட்சி நடைபெற உள்ளதாக அறிகிறோம். அவ்வாறு நகை கண்காட்சி நடத்தினால் நகை தொழிலை நம்பியுள்ள சிறு வியாபாரிகளும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே நகை கண்காட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

உள்ளாட்சி தேர்தலையொட்டி மக்கள் குறை தீர்க்கும் முகாம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனவே கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் வாங்க மாட்டார்கள் என்பதால், மனுவை அங்குள்ள பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு

இதே போல குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி செயலாளர் அந்தோணி முத்து தலைமையில் வந்தவர்கள் ஒரு மனுவை பெட்டியில் போட்டனர். அந்த மனுவில், “குளச்சல் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதுதொடர்பாக குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்யவில்லை. எனவே போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.


Next Story