வெங்காயத்தை பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் எச்சரிக்கை


வெங்காயத்தை பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 Dec 2019 10:45 PM GMT (Updated: 11 Dec 2019 9:05 PM GMT)

வெங்காயத்தை பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுவை மாநில குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குனர் எச்சரித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்துக்கு ஆந்திரா, குஜராத், தமிழ்நாடு, மராட்டியம் மற்றும் வடமாநிலங்களில் இருந்து பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. வடமாநிலங்களில் பெய்த கனமழை மற்றும் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் திடீரென வெங்காயத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது. கிலோ ரூ.200 வரை விற்பனையானது. சாம்பார் வெங்காயத்தின் விலையும் அதிகரித்தது. ரூ.40க்கு விற்று வந்த நிலையில் இந்த வெங்காயம் தரத்துக்கேற்ப ரூ.80 முதல் ரூ.160 வரை விற்கப்பட்டது.

இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இதனால் சமையலில் வெங்காயத்தை பயன்படுத்துவதை தவிர்த்தனர். இந்தநிலையில் எகிப்து நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனாலும் புதுவையில் வெங்காயத்தின் விலை குறையவில்லை. வரத்துக்குறைவும், பதுக்கலும் தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்பட்டது.

குடோன்களில் சோதனை

இந்த நிலையில் புதுவை மாநிலத்தில் வியாபாரிகள் யாரேனும் வெங்காயத்தை பதுக்கி வைத்துள்ளனரா? என்று குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குனர் வல்லவன் தலைமையில் அதிகாரிகள் நேற்று ரங்கப்பிள்ளை வீதி, பெரியமார்க்கெட் பகுதியில் உள்ள வெங்காய குடோன்களில் சோதனை நடத்தினர்.

ஆனால் அப்போது வெங்காய பதுக்கல் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அங்கிருந்த வியாபாரிகளிடம், வெங்காயத்தை யாராவது பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

எகிப்து வெங்காயம்

இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் வல்லவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் வெங்காயம் கிலோ ரூ.70 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகின்றது. பெங்களூருவில் இருந்து கடலூருக்கு வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதால் அங்கு விலை குறைந்துள்ளது. ஆனால் புதுவையில் விலை குறையவில்லை. எனவே வெங்காய மொத்த வியாபாரிகள் தங்களது குடோன்களில் வெங்காயத்தை பதுக்கி வைத்துள்ளனரா? என்று சோதனை மேற்கொண்டோம்.

புதுவை மாநிலத்தில் ஒரு குடோனில் 2½ டன் வரை வெங்காயத்தை இருப்பு வைத்திருக்கலாம். இதற்கு மேல் இருப்பு வைத்திருந்தால் அது சட்டப்படி குற்றமாகும். அதற்கு மேல் இருப்பு வைத்திருந்தால் அத்தியாவசிய உணவுப்பொருள் பதுக்கல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். எகிப்து நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அந்த வெங்காயம் புதுவைக்கும் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் அதனை மக்கள் விரும்பவில்லை, துருக்கி நாட்டில் இருந்தும் வெங்காயம் விரைவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வர உள்ளது. வரும் காலங்களில் பெங்களூருவில் இருந்தும் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும். அதன்பின் வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story