பறக்கை அருகே சிவன் கோவிலில் நாகர் சிலை கொள்ளை


பறக்கை அருகே சிவன் கோவிலில் நாகர் சிலை கொள்ளை
x
தினத்தந்தி 14 Dec 2019 11:00 PM GMT (Updated: 14 Dec 2019 7:46 PM GMT)

பறக்கை அருகே சிவன் கோவிலில் இருந்து நாகர் சிலையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலகிருஷ்ணன்புதூர்,

பறக்கை அருகே அக்கரையில் பெருஞ்சடை மகாதேவர் கோவில் உள்ளது. இங்கு பூசாரியாக ராமகிருஷ்ணசர்மா (வயது 69) என்பவர் உள்ளார். இந்த கோவிலில் தினமும் காலையில் பூஜைகள் நடைபெறும். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொள்வார்கள்.

நேற்று முன்தினம் வழக்கம் போல் பூஜைகள் முடிந்த பின்பு கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலையில் பூசாரி ராமகிருஷ்ண சர்மா கோவிலுக்கு சென்ற போது, கருவறையின் பக்கவாட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சிலை கொள்ளை

உள்ளே சென்று பார்த்த போது பூஜை பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், கருவறையில் இருந்த 1½ அடி உயரமுள்ள பித்தளை நாகர் சிலை கொள்ளையடிக்கப் பட்டிருந்தது. இரவில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து நாகர் சிலையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மேலும், அம்மன் முகத்தில் அணிந்திருந்த வெள்ளி முகம் கழற்றி கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், கொள்ளையர்கள் எடுத்து செல்லவில்லை.

போலீசார் விசாரணை

இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

சிவன் கோவிலில் நாகர் சிலை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story