பாரத பிரதமரின் ஊக்கநிதி திட்டம்: வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்காத 12 ஆயிரம் விவசாயிகள்


பாரத பிரதமரின் ஊக்கநிதி திட்டம்: வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்காத 12 ஆயிரம் விவசாயிகள்
x
தினத்தந்தி 14 Dec 2019 10:39 PM GMT (Updated: 14 Dec 2019 10:39 PM GMT)

விவசாயிகளுக்கான பாரத பிரதமரின் ஊக்க நிதி திட்டத்துக்கு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை 12 ஆயிரம் விவசாயிகள் இணைக்காமல் உள்ளனர்.

திருப்பூர்,

பாரத பிரதமரின் ஊக்கநிதி திட்டத்தில் விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விவசாயிகளின் வங்கி கணக்கில் 4 மாதத்துக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 3 முறை மொத்தம் ரூ.6 ஆயிரம் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 89 ஆயிரத்து 820 விவசாயிகள் இணைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 11 ஆயிரத்து 855 பேர் தங்கள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இது வரை இணைக்கவில்லை. இதனால் அவர்களுக்கான நிதி வங்கி கணக்கில் சேர்க்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே விவசாயிகளின் ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைத்து அவர்களுக்கான நிதியை பெற்றுத்தருவது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன் பேசியதாவது:-

இந்த திட்டத்தில் சேர்ந்துள்ள விவசாயிகளில் 11 ஆயிரத்து 855 பேர் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். எனவே அவர்களின் ஆதார் எண்ணை உடனடியாக வங்கி கணக்கில் இணைக்க வேண்டும். சில விவசாயிகள் விண்ணப்பத்தில் எழுதி உள்ள ஆதார் எண்ணும், வங்கி கணக்கில் உள்ள ஆதார் எண்ணும் வேறுபடுகிறது. சிலரது பெயர் மாறி உள்ளது. இந்த காரணங்களால் பலருக்கு பணம் வந்து சேரவில்லை. மேலும் இந்த திட்டத்தில் சேராத சிலரின் கணக்கில் நிதி வரவு வைக்கப்பட்டுள்ளது என்பது போன்ற பல்வேறு புகார்கள் வந்துள்ளன. எனவே இந்த தவறுகளை உடனடியாக சரி செய்து விவசாயிகள் கணக்கில் சரியானபடி நிதி சேர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப அலுவலர்கள, உதவி தொழில்நுட்ப அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story